விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியர்குப்பத்தில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை அதே கிராமத்தை சேர்ந்த 16 பேர் வாங்கி குடித்துள்ளனர். இதையடுத்து அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், 16 பேரும் முண்டியம்பாக்கம், மரக்காணம் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில், 6 பேர் உயிரிழந்த நிலையில், கள்ளச்சாராய விற்பனையை தடுக்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், கள்ளச்சாராய வியாபாரி அமரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே, கள்ளச்சாராயம் குடித்து ஆபத்தான நிலையில் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயன், சங்கர் உள்ளிட்ட 3 பேர் இன்று சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால், கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. மேலும், பலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியதாவது:
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியர்குப்பம் மீனவ கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பாதி பேர் விழுப்புரம் அரசு மருத்துவமனையிலும், மீதி பாதிபேர் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் இதுவரை 9 பேர் சிகிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
மேலும் பலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், சிலருக்கு கண்பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கிறது. இதேபோன்று செங்கல்பட்டு மாவட்டத்திலும், 4 பேர் போலி மதுபானங்களை அருந்தியதால் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் விற்பனை அதிக அளவு பெருகி இருப்பது குறித்து சட்டமன்றத்தில் கூறினேன். மரக்காணம் சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்.
முதலமைச்சராக ஸ்டாலின் பொறுபேற்றது முதல் தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, கள்ளச்சாராயம், போதை பொருள், கஞ்சா விற்பனை ஆகியவை பெருகி உள்ளது. அதனை தடுக்க திறமையற்ற முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார். மதுவை ஊக்குவித்து வருமானத்தை மட்டும் பார்க்கும் அரசாங்கமாக இந்த அரசாங்கம் உள்ளது. கஞ்சா விற்பனையை கூட அரசால் தடுக்க முடியவில்லை.
மரக்காணம் பகுதியில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல். நாளை மரக்காணம் சென்று உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற உள்ளேன். தமிழகத்தில் மதுபான கடைகள் 24 மணி நேரமும் திறந்து தான் இருக்கிறது. போலி மதுபானம் அதிகம் விற்பனை செய்யப்படுகிறது. வருமானத்தை மட்டும் தான் இந்த அரசு பார்க்கிறது. 500 மதுபான கடை மூடுவதாகக் கூறி 1000 சில்லறை கடைகளை திறக்கிறார்கள். மதுவை ஊக்குவிக்கும் அரசாங்கம் தான் இந்த திமுக அரசாங்கம். தானியங்கி மூலம் அரசு மதுபானம் விற்கப்படுகிறது. போலி மதுபானங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. இவற்றிற்கு தார்மீக பொறுப்பேற்று அந்த துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜியும் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
இவ்வாறு அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறினார்.
- பி.ஜேம்ஸ் லிசா










