முக்கியச் செய்திகள் இந்தியா கட்டுரைகள் செய்திகள்

குஜராத் மக்களின் மனங்களை வென்ற “முதல்வர்” ரஜினிகாந்த்…


ஜெயகார்த்தி

கட்டுரையாளர்

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி உங்களுக்கு தெரியும். ஆனால் குஜராத் மக்களின் சூப்பர் ஸ்டாராக மாறி இருப்பவர் தான் இன்று முதலமைச்சராக பொறுப்பேற்ற  பூபேந்திர ரஜினிகாந்த் படேல். அவரைப் பற்றி பார்ப்போம்…

குஜராத் முதலமைச்சராக 2வது முறையாக பொறுப்பேற்க உள்ள, பூபேந்திர படேலின் இயற்பெயர் பூபேந்திர ரஜினிகாந்த் படேல்.  குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் ஜூலை 15ம் தேதி 1962ம் ஆண்டு பிறந்த அவர், அகமதாபாத் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், கட்டட பொறியியல் முடித்தார். பின்னர் நண்பர்களுடன் இணைந்து கட்டுமான நிறுவனத்தை நடத்திவந்தார்.  பூபேந்திர படேல் அரசியலுக்கு வருவதற்கு முன்பு, படேல் சமூக மக்களுக்கான தொண்டு நிறுவனமான, “சர்தார்தம் விஸ்வ பதிதார் கேந்திரா” அமைப்பின் அறங்காவலராக இருந்தார். யோகாவில் விருப்பம் உள்ள அவர், கிரிக்கெட் மற்றும் பூப்பந்து விளையாட்டிலும் ஈடுபாடு கொண்டவர். நேரம் கிடைக்கும் போதெல்லாம் பூப்பந்து விளையாடும் வழக்கம் உள்ளவர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தாதா பகவானால் நிறுவப்பட்ட அக்ரம் விக்னன் இயக்கத்தை பின்பற்றுபவர் என்பதால் பூபேந்திர படேல் ‘தாதா’ என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். பூபேந்திர படேல் கட்டுமான பொறியியலாளராக இருந்த காலகட்டத்தில்தான், குஜராத் முன்னாள் முதலமைச்சர் ஆனந்த் பென் அறிமுகம் அவருக்கு கிடைத்தது.என்றாலும் அரசியல் பயணத்தில் படிப்படியாக உயர்வைத் தொட்டவர். மேம்நகர் நகராட்சி உறுப்பினராக 1995 முதல் 3 முறை இருந்து அடிப்படை மக்கள் பணிகளில் கவனம் செலுத்தியவர். அகமதாபாத் நகர்ப்புற மேம்பாட்டு ஆணைய தலைவராகவும், அம்தவாட் மாநகராட்சியின் நிலைக்குழு தலைவராகவும் பூபேந்திர படேல் பதவி வகித்தார்.

பின்னர், குஜராத்தில் 2017ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின்போது, கட்லோடியா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட பூபேந்திர படேல், காங்கிரஸ் கட்சியின் சசிகாந்த் படேலை விட 1 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று மக்கள் மனங்களை வென்றவர்.  குஜராத் அமைச்சரவையில் எந்த பொறுப்பும் வகித்திராத பூபேந்திர படேல், அப்போது முதலமைச்சராக இருந்த விஜய் ரூபானி ராஜினாமா செய்த நிலையில், 2021ம் ஆண்டு பூபேந்திர படேல் முதலமைச்சராக பொறுப்பேற்றார். பூபேந்திர படேல் அரசியலில் அறிமுகமானதில் இருந்து அவர் மீது எந்த கிரிமினல் வழக்கும் இல்லை என்பதால் அவரை நேர்மையானவர் என அழைக்கப்படுகிறார்.

குஜராத்தில் பாஜக தொடர் வெற்றியைத் தக்க வைக்குமா என்று கேள்விகளுடன் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதனால் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். 2வது கட்ட வாக்குப் பதிவின் போது பிரதமரின் இரண்டு மணி நேர நகர்வலம் , காங்கிரசால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த தேர்தலில் பாஜக 182 தொகுதிகளில் 156 இடங்களைக் கைப்பற்றி புதிய சாதனை படைத்தது. 7 வது முறையாக தொடர்ச்சியாக ஆட்சியைத் தக்க வைத்தது.

பூபேந்திரா முன்னுள்ள சவால்கள்

இலவசங்களை உள்ளடக்கிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுதல், பட்டிதார் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருதல், அமைச்சர்களுக்கு உரிய இலாக்காக்களை கொடுத்து கட்சியினரை திருப்திப் படுத்துதல், அதிகாரவர்க்கத்தை கட்டிப்போடுதல், உள்ளிட்ட சவால்களை பூபேந்திர படேல் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

குஜராத்தில் நரேந்திர மோடியின் சாதனையை முறியடித்த, முதலமைச்சர் என்ற சாதனைப்படைத்த பூபேந்திர பட்டேல், 56 இடங்களில் பாஜக வெற்றிபெற முக்கிய காரணமானவர். இதனால் கடும் போட்டிகளுக்கு இடையே தொடர்ந்து இரண்டாவது முறையாக குஜராத் முதலமைச்சராக இன்று பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். முதலமைச்சர் பூபேந்திர படேலுடன் அமைச்சர்களும் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மென்மையானவர், ஆனால் உறுதியானவர் என்று பிரதமர் நரேந்திர மோடியால் புகழப்பட்டவர் பூபேந்திர படேல் . படேல் இனத் தலைவர்களில் முதன்மையானவரான பூபேந்திர ரஜினிகாந்த் படேல் உடன், மற்றொரு தலைவரான ஹர்திக் படேலும் வெற்றி பெற்றுள்ளார்.  இலவசங்களுக்கு எதிராக பேசி வந்த பாஜக, குஜராத் தேர்தலில் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு அம்சங்களை தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்துள்ளது. மக்கள் அளித்த மகத்தான வெற்றி அவர்களின் வாழ்வு மேலும் மேம்பட உதவட்டும்.

  • ஜெயகார்த்தி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

எழுத்தாளர் மாலனுக்கு சாகித்ய அகாடமி விருது; முதலமைச்சர் வாழ்த்து

Arivazhagan Chinnasamy

ஓசூர் கலவரம் அரசின் செயலற்ற தன்மையை காட்டுகிறது: கே பி முனுசாமி

Web Editor

ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து: பள்ளிக் கல்வித்துறை

EZHILARASAN D