குஜராத் முதலமைச்சராக பூபேந்திர படேல் இன்று பதவியேற்பு; பிரதமர் மோடி பங்கேற்பு

குஜராத் முதலமைச்சராக பூபேந்திர படேல் இன்று பதவி ஏற்கிறார். இந்த விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். குஜராத் தேர்தல் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலமான…

குஜராத் முதலமைச்சராக பூபேந்திர படேல் இன்று பதவி ஏற்கிறார். இந்த விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

குஜராத் தேர்தல்

பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் நடந்த சட்டசபை தேர்தல் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 182 தொகுதிகளில் இதுவரை இல்லாத வகையில், பாஜக 156 இடங்களில் வெற்றி பெற்றது. இதன்மூலம் தொடர்ந்து 7-வது முறையாக அந்த மாநிலத்தை ஆளுகிற அதிகாரத்தை பாஜக பெற்றுள்ளது.

இதையடுத்து அங்கு முதலமைச்சராக உள்ள பூபேந்திர படேல் தான் மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்பார் என பாஜக மேலிடம் அறிவித்தது. சட்டசபை தேர்தலில் அவர் காட்லோதியா தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஆமீ யாஜ்னிக்கை 1 லட்சத்து 92 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாதனை வெற்றி பெற்றார்.

மீண்டும் முதலமைச்சராக பூபேந்திபடேல்

பாஜகவில் வெற்றி பெற்றுள்ள எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் குஜராத் பாஜக மேலிட பார்வையாளர்களான மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அர்ஜூன் முண்டா மற்றும் கர்நாடடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் சட்டசபை பாஜக தலைவராக (முதலமைச்சராக) பூபேந்திர படேல் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கபட்டார். இதையடுத்து மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாடீல் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் பூபேந்திர படேல் ஆளுநர் மாளிகைக்கு சென்று, ஆளுநர் ஆச்சாரிய தேவ்ரத்தை சந்தித்து புதிய அரசு அமைப்பதற்கு உரிமையு கோரினார். அதை ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.

பதவியேற்பு விழா

இதையடுத்து புதிய முதலமைச்சராக பூபேந்திர படேல் இன்று பதவி ஏற்க உள்ளார். இந்த விழா காந்திநகரில் அரசு புதிய தலைமைச்செயலகம் அருகே அமைந்துள்ள ஹெலிபேடு மைதானத்தில் இன்று கோலாகலமாக நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இன்று மதியம் 2 மணிக்கு நடக்கிற பதவி ஏற்பு விழாவில், பூபேந்திர படேலுக்கு ஆளுநர் ஆச்சாரிய தேவ்ரத் பதவிப்பிரமாணமும், ரகசியக்காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி பங்கேற்பு இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள். இதையொட்டி காந்தி நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.