“திமுக ஆட்சியில் காவல்துறை முழுமையாக செயலிழந்துவிட்டது” – அண்ணாமலை விமர்சனம்!

அரசு மருத்துவமனையில் கூட பாதுகாப்பு வழங்க முடியாத இந்த திமுக ஆட்சியில், பொதுமக்கள் எங்கே பாதுகாப்பாக இருப்பது என்று அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “சென்னையின் முக்கிய அரசு மருத்துவமனையான, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை வளாகத்திலேயே, பல்வேறு குற்ற வழக்குகள் கொண்ட ஆதி என்ற நபர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். தலைநகரில் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடந்துள்ள இந்தப் படுகொலை, திமுக ஆட்சியில் காவல்துறை முழுமையாக செயலிழந்துவிட்டதை நிரூபிக்கிறது.

தலைநகரின் மையப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் கொலை நடக்கிறது என்பது, காவல்துறையின் தோல்வி மட்டும் அல்ல. திமுக அரசின் நிர்வாகத் தோல்வி. கடந்த ஐந்து ஆண்டுகளில், தமிழகத்தில் கொலை நடைபெறாத நாட்களை, விரல் விட்டு எண்ணி விடலாம். எதிர்க்கட்சியினரைப் பழி வாங்க மட்டுமே காவல்துறையைப் பயன்படுத்தி, தமிழகக் காவல்துறையை முற்றிலுமாக முடக்கி வைத்திருப்பதுதான் திமுக அரசின் ஒரே சாதனை.

வயது முதிர்ந்தவர்கள், பெண்கள், குழந்தைகள், மாணவ மாணவியர், இளைஞர்கள் என, யாருமே திமுக ஆட்சியில் பாதுகாப்பாக உணரவில்லை. அரசு மருத்துவமனையில் கூட பாதுகாப்பு வழங்க முடியாத இந்த திமுக ஆட்சியில், பொதுமக்கள் எங்கே பாதுகாப்பாக இருப்பது?

துண்டுச்சீட்டில் யாரோ எழுதிக் கொடுப்பதை, திமுக அரசின் சாதனை என்று மேடையில் வாசிப்பது மட்டும்தான் முதலமைச்சரின் பணி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநில அரசின் முதல் பணியான சட்டம், ஒழுங்கைக் காப்பாற்றத் தெரியாமல், மேடைகளில் ஏறிப் பொய் சொல்கிறார்? இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.