அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இருப்பதால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி தொடர வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தருமபுரி சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாமகவைச் சேர்ந்த எஸ்.பி. வெங்கடேஷ்வரன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுகவினரை நம்பாமல், பீகாரில் இருந்து வந்த பிரஷாந்த் கிஷோரை நம்புவதாக தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமியின் மிகப்பெரிய தகுதி விவசாயி என்றும், ஆனால், ஸ்டாலினுக்கு கருணாநிதியின் மகன் என்பதை தவிர வேறு தகுதி எதுவும் கிடையாது என தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில், பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாகக் குறிப்பிட்ட அன்புமணி ராமதாஸ், இந்த ஆட்சி தொடர மக்கள் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.







