மத்திய அரசின் உதவியால் தமிழகம் முன்னேறும் மாநிலமாக உள்ளது என கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் மக்களவை உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எச். வசந்தகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தலுடன் கன்னியாகுமரி நாடாளுமன்றத்துக்கான இடைத்தேர்தலும் வரும் ஏப்ரல் 6- ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையெடுத்து கன்னியாகுமரி தொகுதியில் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு ஆதரவாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் இன்று நாகர்கோவில் பகுதியில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி,“திமுக ஆட்சியில் மின்வெட்டு என்பது தொடர்கதையாக இருந்துவந்தது. ஆனால் அதிமுக தலைமையிலான ஆட்சி அமைந்த கடந்த பத்து வருடங்களாகத் தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை. அதேபோல் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதிலும் மாநில மக்கள் அனைவருக்கும் நலத்திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தும் அரசாக அதிமுக அரசு உள்ளது. தமிழகம் இவ்வாறு சிறப்பாகச் செயல்படுவதற்கு உதவியாக மத்திய அரசு உள்ளது. மத்திய அரசின் உதவியால்தான் தமிழகம் முன்னேறும் மாநிலமாக வெற்றி நடைபோடுகிறது.
ஆனால் எதிர்க்கட்சிகள் அதிமுக மக்களுக்குக் கடந்த 10 ஆண்டுகளாக எதுவும் செய்யவில்லை என தவறான பரப்புரை மேற்கொண்டுவருகிறார்கள். கன்னியாகுமரி தொகுதியில் வேளான் பணி, மீன்பிடி தொழில் பிரதான தொழிலாக உள்ளது. தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றால் மீனவர்கள் அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்படும்” என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.







