முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

அதிமுகவை புரட்டிப்போட்ட 2022… 51வது ஆண்டில் 51 அதிரடி திருப்பங்கள்….


எஸ்.இலட்சுமணன்

கட்டுரையாளர்

தனது அரசியல் பயணத்தில் அரை நூற்றாண்டை கடந்துள்ள அதிமுகவில் கட்சி சின்னமே முடங்கும் அளவிற்கு பிரளயங்கள் இதற்கு முன்பு தோன்றியிருக்கின்றன. ஆனால் அப்போதெல்லாம் இரண்டு அணிகளாகத்தான் கட்சி பிரிந்திருந்தது. ஆனால் அதிமுகவின் பொன் விழா ஆண்டான 2022ல்தான் அக்கட்சி 4 அணிகளாக பிரிந்துகிடக்கும் அளவிற்கு சலசலப்புகள் மேலோங்கியிருக்கின்றன. கடந்த டிசம்பர் 5ந்தேதி ஜெயலலிதா நினைவு நாளன்று எடப்பாடி பழனிசாமி, ஒ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தலைமையில் 4 அணிகளாக பிரிந்து சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினர். 51வது ஆண்டில் அதிமுக அடியெடுத்து வைத்த 2022ம் ஆண்டில் அக்கட்சியில் நிகழ்ந்த 51 அதிரடி திருப்பங்கள் என்னவென்று பார்ப்போம். 

1) மார்ச் 3, 2022- கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்த பிறகு ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே மனக்கசப்பை அதிகரிக்கும் வகையில் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே ஆங்காங்கே சர்ச்சைகள் தலைகாட்டின. குறிப்பாக சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளத்தில் அதிமுக நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றியது சலசலப்பை ஏற்படுத்தியது.  சசிகலாவை அதிமுகவில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூறிவந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரில் சசிகலாவிற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றியது ஓபிஎஸ், இபிஎஸ் அணியினரிடையே மனக்கசப்பை அதிகரித்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

2) மார்ச் 4, 2022- அதிமுகவை ஒன்றிணைப்பேன் என்கிற முழக்கத்தோடு தன் அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கிய சசிகலா,  தென் மாவட்டத்தில் வலம் வந்து பரபரப்பை ஏற்படுத்தினார். அப்போது திருச்செந்தூரில் அவரை ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா சந்தித்தார். இந்த சந்திப்பு ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பிடையே புகைச்சலை அதிகரித்தது.

3) மார்ச் 5, 2022- சசிகலாவை சந்தித்துவந்த மறுநாளே அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா நீக்கப்பட்டார். தேனி மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் எஸ்.முருகேசன், தேனி மாவட்ட மீனவர் பிரிவுச் செயலாளர் வைகை கருப்புஜி, கூடலூர் நகர புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர் எஸ்.சேதுபதி ஆகியோரும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டனர்.

4) ஜூன் 2, 2022- அதிமுகவில் அதிகாரப்போட்டி தலை தூக்கிய நிலையில், பலப்பரிட்சை நடத்திப்பார்க்க வேண்டியது அவசியம் என்ற சூழ்நிலை உருவாகியது. இந்நிலையில் ஜூன் 23ந்தேதி சென்னை வானகரத்தில் ஸ்ரீவாரு மண்டபத்தில், அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறும் என்கிற அறிவிப்பு வெளிவந்தது. கடைசியாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்  இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கை ஜூன் 23ந்தேதி பொதுக்குழு கூட்டத்திற்கான அழைப்பு அறிக்கைத்தான்.

5) ஜூன் 14, 2022-  அதிமுகவில் இரட்டை இலை சின்னமே முடங்கும் அளவிற்கு 2017ம் ஆண்டு ஏற்பட்ட பிரளயம், இரட்டை தலைமை ஏற்படுத்தப்பட்டு சரிசெய்யப்பட்டது. இந்நிலையில் மீண்டும் ஒற்றைத் தலைமையை ஏற்படுத்த வேண்டும் என்கிற கோஷம் எழுந்து அக்கட்சியில் மீண்டும் பிளவு ஏற்பட காரணமாக அமைந்தது. ஜூன் 14ந்தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் கூட்டத்தில் ஒற்றை தலைமையை ஏற்படுத்த வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் முழக்கமிட்டது ஓபிஎஸ், இபிஎஸ் அணி மீண்டும் தனியாக பிரிவதற்கு மூல காரணமாக அணிந்தது. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை கோரிக்கை எழுந்ததை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பகிரங்கமாக தெரிவித்தார்.

6) ஜூன் 16, 2022- ஒற்றை தலைமை சர்ச்சை வெடித்த நிலையில் அதிமுக ஒருங்ககிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் வீடுகளில் அவர்களது ஆதரவாளர்கள் குவிந்தனர். ஆலோசனைகள் தொடர்ந்தன. இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரில் முதலில் வெளிப்படையாக வாய்திறந்தது ஓ.பன்னீர்செல்வம்தான். ஒற்றைத் தலைமை தற்போதைய சூழலில் தேவை இல்லை என்றும், பொதுச் செயலாளர் பதவியை ஜெயலலிதாவைத் தவிர மற்றொருவர் ஏற்பது ஜெயலலிதாவிற்கு செய்யும் துரோகம் என்றும் தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார் ஓ.பன்னீர்செல்வம். அவரது இந்த பேட்டி, எடப்பாடி பழனிசாமி தரப்பினரை மேலும் உசுப்பேற்றியது.

7) ஜூன் 18, 2022- ஜூன் 23ந்தேதி பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து இறுதி செய்வதற்காக தீர்மானக்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கட்சி அலுவலகம் வந்தபோது, ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே அதிமுக அலுவலக வளாகத்தில் மோதல் ஏற்பட்டது. அப்போது ஜெயக்குமாருடன் வந்த மாரிமுத்து  என்பவரை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்கியதில் அவருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டதாக புகார் எழுந்தது.

8) ஜூன் 22, 2022- பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களாகவே இருந்த நிலையில், பொதுச் செயலாளராக பொதுக்குழுவில் அவர் தேர்ந்தெடுக்கப்படுவார் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், ஜூன் 23ந்தேதி நடைபெறவிருந்த பொதுக்குழுவிற்கு தடைவிதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் அணி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அந்த கோரிக்கையை ஏற்க மறுத்து பொதுக்குழுவுக்கு அனுமதி அளித்தார்.

9) ஜூன் 23, 2022- ஜூன் 23ந்தேதி பொதுக்குழு நடத்த அனுமதி அளித்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அளித்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வில் ஓபிஎஸ் அணி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு விசாரித்தது. நீதிபதியின் வீட்டில் நள்ளிரவு தொடங்கி நடைபெற்ற இந்த விசாரணையில் அதிகாலை தீர்ப்பு வழங்கப்பட்டது. ஒற்றைத் தலைமை தீர்மானத்தை நிறைவேற்ற அனுமதி மறுக்கும் வகையில் தீர்ப்பு அமைந்திருந்தது. ஏற்கனவே வரையறுக்கப்பட்ட 23 தீர்மானங்களை நிறைவேற்றலாம், புதிய தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறினர். இந்த தீர்ப்பு ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு உற்சாகம் அளித்ததையடுத்து அவர்கள் பட்டாசு வெடித்து தீர்ப்பைக் கொண்டாடினர்.

10) ஜூன் 23, 2022 –  பெரும் பரபரப்புக்கிடையே ஜூன் 23ந்தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் ஓபிஎஸ்க்கு எதிராக எழுந்த கண்டன கோஷங்களும், முழக்கங்களும், அவரது அரசியல் வாழ்க்கையில் அதுவரை சந்திக்காத தர்மசங்கடங்களாக அமைந்தன.இதனால் பொதுக்குழுவைவிட்டு பாதியிலேயே முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் வெளியேறினர்.

11) ஜூன் 23, 2022- பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தனது பலத்தை நிரூபித்திருந்த நிலையில், ஓபிஎஸ் ஏற்கனவே ஒப்புதல் அளித்திருந்த 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. மேலும் ஜூலை 11ந்தேதி அதிமுகவின் பொதுக்குழு மீண்டும் கூடும் என்றும், அதில் எடப்பாடி பழனிசாமியை இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் கட்சியின் நிரந்தர அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்மகன் உசேன் அறிவித்தார்.

12) ஜூன் 23, 2022- பொதுக்குழுவில் தனக்கு நிகழ்ந்த அவமதிப்புகளால் மனம் தளராத ஓபிஎஸ்,  அன்று இரவே டெல்லி பயணம் மேற்கொண்டார். அங்கு குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக களமிறங்கியிருந்த திரௌபதி முர்முவைக் சந்தித்து அதிமுக சார்பில் அவருக்கு ஆதரவைத் தெரிவித்தார். இதன் மூலம் அதிமுக ஒருகிணைப்பாளர் என்கிற முறையில் டெல்லியில் தனது அடையாளத்தை நிலை நாட்ட ஓபிஎஸ் முயன்றதாகக் கூறப்பட்டது.

13) ஜூன் 27, 2022- ஜூன் 23ந்தேதி அதிமுக பொதுக்குழுவில் நடந்த விஷயங்கள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் புகார் அளித்தார். அன்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அரங்கேற்றிய நிகழ்வுகள் சட்டவிரோதமானது என தெரிவித்தார்.  ஜூலை 11ந்தேதி அதிமுக பொதுக்குழுவை கூட்டியிருப்பது கட்சியின் விதிகளுக்கு முரணானது என்றும் தனது கடிதத்தில் ஓபிஎஸ் குற்றம்சாட்டியிருந்தார்.

14) ஜூன் 29, 2022- உள்ளாட்சி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை  சின்னம் ஒதுக்குவது தொடர்பான படிவத்தில் கையெழுத்திடுமாறு கேட்டுக்கொண்டு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதினார்.

15) ஜூன் 30, 2022- உள்ளாட்சி இடைத்தேர்தல் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் எழுதிய கடிதத்திற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, 2021ம் ஆண்டு டிசம்பர் 1ந்தேதி நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஜூன் 23ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டினார். இதனால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக தெரிவித்த இபிஎஸ், எனவே அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையில் ஓபிஎஸ் அனுப்பிய கடிதத்தை ஏற்க முடியாது எனக் கூறினார்.

16) ஜூன் 27, 2022- ஜூலை 11ந்தேதி அதிமுக பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அப்போது கட்சி அலுவலக வளாகத்தில் ஓபிஎஸ் மற்றும், இபிஎஸ் இணைந்து இருந்த பேனரில் ஓபிஎஸ் படம் மட்டும் கிழிக்கப்பட்டது. ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் சமாதானம் அடையும் சூழல் நிலவவில்லை என்பதை இந்த சம்பவம் உணர்த்தியது.

17) ஜூலை 7, 2022- அதிமுக பொதுக்குழு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜூலை 11ந்தேதி பொதுக்குழு கூட்டத்தை கூட்ட தடையில்லை என்று உத்தரவிட்டது. கட்சி விதிப்படி கூட்டத்தை கூட்டலாம் என்றும் அனுமதி அளித்தது. அதே நேரம் இந்த விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் தேடுவதற்கு இந்த வழக்கு தடையாக இருக்காது  என்றும் நீதிபதிகள் கூறினர்.

18) ஜூலை 08, 2022- ஜூலை 11ந்தேதி பொதுக்குழுவை கூட்டுவதற்கு எதிராக ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட மனு  மீதான தீர்ப்பு 11ந்தேதி காலை 9 மணிக்கு வழங்கப்படும் என நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அறிவித்தார். 11ந்தேதி காலை 9.15 மணிக்கு பொதுக்குழுவை கூட்ட இபிஎஸ் தரப்பினர் ஏற்பாடுகளை செய்துவந்த நிலையில், அந்த பொதுக்குழு நடைபெறுமா என்பது காலை 9 மணிக்குதான் உறுதியாகும் என்ற சூழல் அதிமுகவினிரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்த 2 நாட்கள் அக்கட்சியினருக்கு திக் திக் நிமிடங்களாக நகர்ந்தன.

19) ஜூலை 11, 2022- அதிமுக பொதுக்குழு  நடத்த தடைவிதிக்க ஓபிஎஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்  வைரமுத்து ஆகியோர் விடுத்த கோரிக்கையை நிராகரித்த கிருஷ்ணன் ராமசாமி, பொதுக்குழுவை கூட்ட இபிஎஸ் தரப்பினருக்கு அனுமதி அளித்தார். 2665 பொதுக்குழு உறுப்பினர்களில் 2190 பேர் ஒப்புதலுடன் ஜூலை 11ந்தேதி பொதுக்குழுவை கூட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளதை நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.  ஜூலை 11ந்தேதி பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாக ஜூன் 23ந்தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் இதனை 15 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதாகவே எடுத்துக்கொள்ள முடியும் என்றும் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தனது தீர்ப்பில் கூறினார்.

20) ஜூலை 11, 2022- அதிமுக செயற்குழு, மற்றும் பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் வகித்த பொருளாளர் பதவி திண்டுக்கல் சீனிவாசனுக்கு வழங்கப்பட்டு, அதிமுகவின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

21) ஜூலை 11, 2022- அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க வேண்டும் என பொதுக்கழு உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பி வந்த நிலையில், அதனை ஏற்று ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஓ.பன்னீர்செல்வத்தின் முக்கிய ஆதரவாளராக உள்ள முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கமும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.

22) ஜூலை 11,2022- அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ரத்து செய்து, பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் உருவாக்கும் வகையில் அக்கட்சியின் சட்டவிதிகளில் மாற்றம் கொண்டுவரும் தீர்மானம் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது. கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுப்பட்ட நிலையில், நிரந்தரப் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலை அடுத்த 4 மாதங்களுக்குள் நடத்துவது என்றும் ஜூலை 11ந்தேதி பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

23) ஜூலை 11, 2022- ஒருபுறம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு நடந்துகொண்டிருக்க மறுபுறம், தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம். அப்போது அங்கு ஓபிஎஸ், மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டு 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த மோதல் எதிரொலியாக அதிமுக அலுவலகத்திற்குள் சீல் வைக்க வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டார். இதையடுத்து அதிமுக அலுவலகம் மூடி சீல் வைக்கப்பட்டது.

24) ஜூலை 12, 2022- அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் ரவுடிகள் உதவியுடன அத்துமீறி நுழைந்து முக்கிய பொருட்களை ஓபிஎஸ் அபகரித்துச் சென்றதாக இபிஎஸ் ஆதரவாளரான ஆதி ராஜாராம் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

25) ஜூலை 13, 2022- அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி தனக்குள்ள நியமன அதிகாரங்களைப் பயன்படுத்தி கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்தார். கட்சியின் துணைப்பொதுச் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் நியமிக்கப்பட்டனர். எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே வகித்து வந்த தலைமை நிலையச் செயலாளர் பதவி எஸ்.பி.வேலுமணிக்கு வழங்கப்பட்டது.

26) ஜூலை 14, 2022- அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின்  புதிய நிர்வாகிகளை நியமித்த இபிஎஸ், அதே நேரம் அதிரடியாக நீக்கங்களையும் மேற்கொண்டார். ஓபிஎஸ் மகனும் தேனி தொகுதி எம்.பியுமான ரவீந்திரநாத், ஓ.பன்னீர்செல்வத்தின் மற்றொரு மகனான ஜெயபிரதீப் உள்பட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 18 பேரை ஒரே நேரத்தில் கட்சியிலிருந்து நீக்கினார் எடப்பாடி பழனிசாமி.

27) ஜூலை 14, 2022- ஓபிஎஸ் மகன்கள் மற்றும் அவரது முக்கிய ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்ட சிறிது நேரத்திற்குள் ஓ.பன்னீர்செல்வத்திடமிருந்து அதிரடியாக அறிக்கை ஒன்று வெளியானது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என தம்மை குறிப்பிட்டு அவர் வெளியிட்டிருந்த அந்த அறிக்கையில், எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, ஜெயக்குமார் உள்ளிட்ட 22 பேரை அதிமுகவிலிருந்து நீக்குவதாக அறிவித்தார்.

28) ஜூலை 17, 2022- அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, முதன் முறையாக அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி கூட்டினார். ஏற்கனவே ஓபிஎஸ் அணியில் இருந்த 2 எம்.எல்.ஏக்கள் தவிர மற்ற அனைத்து அதிமுக எம்.எல்.ஏக்களும் எடப்பாடி பழனிசாமி கூட்டிய கூட்டத்தில் பங்கேற்றனர். இதன் மூலம் மீண்டும் ஒருமுறை தனது பலத்தை நிரூபித்தார் இபிஎஸ்.

29) ஜூலை 19, 2022- அதிமுக பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கட்சியின் வங்கி வரவு செலவுகளை கையாள அதிகாரம் அளித்து எடப்பாடி பழனிசாமி அளித்த கடிதத்தை கரூர் வைஸ்யா உள்ளிட்ட வங்கிகள் ஏற்றன. அதே நேரம் திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளர் அல்ல தாம்தான் பொருளாளர் தம்மை கேட்காமல் யாரிடமும் அதிமுக வரவு செலவுகளை கையாள வேண்டாம் எனக் கூறி ஓபிஎஸ் எழுதிய கடிதம் நிராகரிக்கப்பட்டது.

30) ஜூலை 19, 2022-  அதிமுகவின் சட்டமன்ற கட்சித் துணை தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும், துணைச் செயலாளராக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். ஜூலை 17ந்தேதி நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் இபிஎஸ் கூறினார்.

31) ஜூலை 20, 2022- அதிமுக அலுவலகத்தின் சீலை அகற்றி தங்கள் வசமே அலுவலகத்தை ஒப்படைக்க வேண்டும் என ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அதிமுக அலுவலக சீலை அகற்றி இபிஎஸ் வசம் அக்கட்சியின் அலுவலக சாவியை ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒரு மாதத்திற்கு தொண்டர்கள் அதிமுக அலுவலகம் வரவும் தடை விதிக்கப்பட்டது.

32) ஜூலை 21, 2022- நீதிமன்ற தீர்ப்பையடுத்து அதிமுகஅலுவலகத்திலிருந்த சீல் அகற்றப்பட்டது. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் முன்னிலையில் மயிலாப்பூர் வட்டாட்சியர் ஜெகன் ஜீவன்ராம் சீலை அகற்றினார்.  அதிமுக அலுவலகம் தங்கள் வசம் வந்ததை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்.

33) ஜூலை 21, 2022- அதிமுகவிலிருந்து ஓ.பி.ரவீந்திரநாத் நீக்கப்பட்டுள்ள நிலையில், அவரை நாடாளுமன்றத்தில் அதிமுகவின் எம்.பி.யாக கருதக்கூடாது என்றும், அந்த அந்தஸ்தை அவரிடமிருந்து ரத்து செய்ய வேண்டும் என்றும் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார்.

34) ஜூலை 23, 2022- அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி தரப்பு பண பரிவர்த்தனைகளை கையாள்வதை வங்கிகள் ஏற்றுக்கொண்ட நிலையில் அதிமுகவின் 7 வங்கி கணக்குகளை முடக்கி வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டு, சென்னை மண்டல ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதினார். அதிமுக தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் வழக்குகள் நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டிய ஓ.பன்னீர்செல்வம், தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும்வரை தாம்தான் அதிமுகவின் பொருளாளர் என கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

35) ஆகஸ்ட் 5, 2022- ஜூலை 11ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ், மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்து வந்த நிலையில், நீதிபதியை மாற்றக்கோரி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரியிடம் ஓபிஎஸ் தரப்பில் முறையிடப்பட்டது. இந்நிலையில் இந்த விஷயத்தை தலைமை நீதிபதியின் பரிசீலனைக்கேவிடுவதாக நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கை விசாரிக்க நீதிபதி ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டார்.

36) ஆகஸ்ட் 17, 2022- அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூம் அடைந்த பின்னர்,  ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு மறக்க முடியாத நாளாக இந்த நாள் அமைந்தது. ஜூலை 11ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என தீர்ப்பு அளித்த நீதிபதி ஜெயச்சந்திரன், ஜூன்23ந்தேதிக்கு முந்தைய நிலையே அதிமுகவில் தொடர வேண்டும் என தனது தீர்ப்பில் கூறினார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் என்பதை உறுதிப்படுத்திய இந்த தீர்ப்பை அவரது ஆதரவாளர்கள் தமிழ்நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடினர்.

37) ஆகஸ்ட் 17, 2022– உயர்நீதிமன்ற தீர்ப்பு தமக்கு சாதமாக வந்ததையடுத்து உற்சாகமாக செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், அன்புச் சகோதரர் எடப்பாடி பழனிசாமி தம்முடன் இணைந்து மீண்டும் செயல்பட வேண்டும் என அழைப்புவிடுத்தார். அதிமுகவை பலப்படுத்த சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரும் தம்முடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் ஓபிஎஸ் அழைப்பு விடுத்தார். கூட்டுத் தலைமையாக செயல்படுவோம் என ஓபிஎஸ் விடுத்த அழைப்பை எடப்பாடி பழனிசாமி நிராகரித்தார்.

38) ஆகஸ்ட் 18, 2022- கூட்டுத்தலைமையாக செயல்படுவோம் என ஓபிஎஸ் விடுத்த அழைப்பை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வரவேற்றார். இது குறித்து டிவிட்டரில் பதிவிட்ட டிடிவி தினகரன், சுயநலமற்ற, ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவரும் ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த அழைப்பை வரவேற்கத்தான் செய்வார்கள் என  கூறினார்.

39) ஆகஸ்ட் 27, 2022- ஆகஸ்ட் 17ந்தேதி வழங்கப்பட்ட உயர்நீதிமன்ற தீர்ப்பையடுத்து ஓபிஎஸ் தரப்புக்கு மற்றொரு உற்சாகமூட்டும் நிகழ்வு ஆகஸ்ட் 27ந்தேதி நிகழ்ந்தது. இபிஎஸ் ஆதரவாளராக இருந்த உசிலம்பட்டி தொகுதி எம்.எல்.ஏ அய்யப்பன் சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்திற்கு சென்று அவருக்கு தமது ஆதரவை தெரிவித்தார். இபிஎஸ் அணியில் உள்ள மேலும் பல எம்.எல்.ஏக்கள் ஓபிஎஸ் அணிக்கு வருவார்கள் என அய்யப்பன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

40) செப்டம்பர் 2, 2022- ஜூலை 11ந்தேதி பொதுக்குழு செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது,  நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் அடங்கிய அமர்வு தீர்ப்பு அளித்தது. ஜூலை 11ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன் மூலம் அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு சட்ட அங்கீகாரம் கிடைத்தது.

41) செப்டம்பர் 30, 2022- ஜூலை 11ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த இடைக்கால தடைவிதித்தது. நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை வழங்கியது.

42) நவம்பர் 6, 2022- நாமக்கல்லில் நடைபெற்ற அதிமுக 51ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் அதிமுகவில் சேர்க்கும்  பேச்சுக்கே இடமில்லை எனத் தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்றும் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

43) டிசம்பர் 5, 2022- மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு நாளில் சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுகவினர் 4 பிரிவுகளாக பிரிந்து அஞ்சலி செலுத்தியதும், உறுதிமொழி ஏற்றதும் பரபரப்பை ஏற்படுத்தியது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகிய 4 பேரின் தலைமையில் தனிதனியாக உறுதிமொழிகள் எடுக்கப்பட்டன.

44) டிசம்பர் 5, 2020- டெல்லியில்  ஜி20 மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய அரசு சார்பில் அவருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளர் என்றே அவரை குறிப்பிட்டிருந்தனர். இபிஎஸ் தலைமையில் இருப்பதே உண்மையான அதிமுக என்பதை இந்த கடிதம் அங்கீகரிப்பதாக அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

45) டிசம்பர் 12, 2022- குஜராத் மாநில முதலமைச்சராக பூபேந்திர படேல் பதவியேற்கும் விழாவில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் இந்த விழாவில் அவர் பங்கேற்கவில்லை. மத்தியில் ஆளும் பாஜக ஓபிஎஸ் அணியையே உண்மையான அதிமுகவாக அங்கீகரிப்பதையே பதவியேற்பு விழாவில் ஓபிஎஸ் பங்கேற்றது சுட்டிக்காட்டுவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். அதேநேரம் நிகழ்ச்சியில் பாஜகவினர் ஓபிஎஸ்க்கு காவித்துண்டு அணிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஓபிஎஸ் பாஜகவில் இணைய உள்ளாரா என்கிற விவாதங்களும் எழுந்தன.

 

46) டிசம்பர் 21, 2022- ஓபிஎஸ் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்திய நாளில், இபிஎஸ் தரப்பிற்கு உற்சாகமூட்டம் ஒரு தகவல் வைரலானது. அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த அக்கட்சியின் 2021-2022ம் ஆண்டிற்கான வரவு செலவு கணக்கை தேர்தல் ஆணையம் ஏற்ற தகவல் அன்று வெளியானது. இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி கையொப்பம் இட்டு தாக்கல் செய்த வரவு செலவு கணக்கு தணிக்கை அறிக்கை தேர்தல் ஆணையத்தின் இணையத்தளத்திலும் வெளியிடப்பட்டது.47) டிசம்பர் 21, 2022- ஒன்றிணைந்து செயல்பட விடுத்த அழைப்புகளை எடப்பாடி பழனிசாமி தரப்பு தொடர்ந்து நிராகரித்து வந்த நிலையில், அதிரடியாக அரசியல் நகர்வுகளை மேற்கொள்ள தொடங்கிய ஓபிஎஸ்,  மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தை சென்னையில் கூட்டினார். இதில் ஓ.பன்னீர் செல்வத்தால் புதிதாக நியமிக்கப்பட்ட 88 மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் இதற்கு முன் இல்லாத வகையில் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக சாடினார். தனிக்கட்சி தொடங்கி நடத்த தயாரா என்றும் இபிஎஸ்க்கு ஓபிஎஸ் சவால் விடுத்தார். இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், கட்சியின் பொருளாளராக இருந்து தாம் ஏற்கனவே தயாரித்த வரவு செலவு கணக்கு அறிக்கையைத்தான் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதாக விளக்கம் அளித்தார்.

 

 

48) டிசம்பர் 23, 2022-  ஒருபுறம் ஓபிஎஸ், இபிஎஸ் அணியினரிடையே மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில்,  இருவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியை தான் தொடங்கிவிட்டதாக சசிகலா தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் இதனைத் தெரிவித்தார். இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவருக்கும் தாம் பொதுவானவர் என்றும் அனைவரையும் ஒன்றிணைத்து ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்குவேன் என்றும் சசிகலா கூறினார்.

 

49) டிசம்பர் 27, 2022- ஓபிஎஸ் நடத்திய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தையடுத்து எடப்பாடி பழனிசாமி, அதிமுக தலைமைக்கழக செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை அதிமுகவின் தலைமை அலுவலகமான சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர் மாளிகையில் கூட்டினார். ஏற்கனவே இபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்து வந்த நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். எம்.ஜி.ஆர் நினைவு நாளில் தனியாக வந்து அஞ்சலி செலுத்தியதையடுத்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்  மனக்கசப்பில் உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அவர் இபிஎஸ் கூட்டிய கூட்டத்தில் பங்கேற்பாரா என்கிற பரபரப்பு நிலவியது. ஆனால் கூட்டத்தில் முன்வரிசையில் வந்து அமர்ந்து இபிஎஸ் அணியிலேயே தாம் தொடர்வதை உறுதி செய்தார் சி.வி.சண்முகம்.

50) டிசம்பர் 28, 2022- ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான கருத்துக்களை தெரிவிப்பதற்காக இந்திய சட்ட ஆணையம் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவரை அதிமுகவின் பொதுச் செயலாளர் என குறிப்பிட்டிருந்த தகவல் வெளியாகியது. இந்த கடிதம் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தியது.

51) டிசம்பர் 29, 2022- புலம்பெயர் தொழிலாளர்கள் வாக்களிக்க வகை செய்யும் வகையில் ஏற்படுத்தப்படும் ரிமோட் வாக்குப்பதிவு எந்திரம் தொடர்பான ஆலோசனை கூட்டம் 16-1-2023ல் டெல்லியில் நடைபெற உள்ள நிலையில், அதில் பங்கேற்க அதிமுகவிற்கு தேர்தல் ஆணையம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. அதில்  அதிமுக தலைமையை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்றே குறிப்பிட்டிருந்தது ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களை உற்சாகம் அடையச் செய்தது.  கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்வதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதைத்தான் இந்த கடிதம் சுட்டிக்காட்டுவதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் குறிப்பிட்டனர். அதே நேரம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி அதிமுகவில் இல்லை எனக் கூறி  தேர்தல் ஆணையத்தின் கடிதத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியானது

-எஸ்.இலட்சுமணன்

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

உலகிலேயே முதல்முறையாக மாற்றுத்திறனாளி விண்வெளி வீரரை பணியமர்த்தும் இஎஸ்ஏ

Vandhana

நெல் கொள்முதல் நிலையங்களை மூடுவதா? அன்புமணி

EZHILARASAN D

போலி சான்றிதழ் விவகாரம்: மேல் முறையீடு செய்ய ’அம்பானி’ நடிகை முடிவு!

EZHILARASAN D