பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு சேர்க்கப்பட்டது அதிமுகவின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க கோரி அதிமுக சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டதுடன் , திருவண்ணாமலையில் வரும் 2ம் தேதி கண்டன ஆர்பாட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு, பொங்கல் தொகுப்பில் கரும்பும் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருப்பது அதிமுகவின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
எனவே திருவண்ணாமலையில் வரும் 2ம் தேதி நடைபெறவிருந்த கண்டன ஆர்பாட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ள அவர், இனி வரும் காலங்களிலும், விவசாயிகள், மக்களுக்கு ஆதரவாக எப்போதும் அதிமுக துணை நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.







