இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சென்ற கார் சாலையின் நடுவே உள்ள டிவைடரில் மோதி விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ரிஷப் பண்ட் இன்று காலை
உத்தராகண்ட் மாநிலத்திலிருந்து டெல்லிக்கு தனது சொகுசு காரில் (BMW GT) வந்து கொண்டிருந்தபோது உத்தரகண்ட் – அரியானா மாநில எல்லை பகுதியில் மகலூர் போலீஸ் சரகத்துக்குட்பட்ட இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் நிலை தடுமாறி, சாலை நடுவில் இருந்த தடுப்பில் மோதி பயங்கர விபத்திற்கு உள்ளானதில் கார் தீப்பற்றி எரிந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
படுகாயம் அடைந்த ரிஷப் பண்ட் உடனடியாக சுதாரித்துக் கொண்டு கார் கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியே வந்துள்ளார். பின்னர் உடனடியாக மீட்கப்பட்ட அவர் முதல்கட்ட சிகிச்சைக்காக ரூர்க்கி மாவட்டத்தில் உள்ள சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு முதுகிலும் தோள்பட்டைலும் காயமடைந்து இருப்பதாகவும், காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாகவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு ரிஷப் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் காயமடைந்த ரிஷப் பந்துக்கு தேவையான அனைத்து உயர்தர சிகிச்சைகளை வழங்கவும், தேவைப்பட்டால் அவரை வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஏர் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யவும் உத்தரகண்ட் முதலமைச்சர் புஷ்கர்சிங் தாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றிய இந்திய அணியில் பண்ட் இடம்பெற்றிருந்தார். அவர் 46 மற்றும் 93 ரன்களை அடித்திருந்தார். இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.