தமிழ்நாடு சட்டசபையில் 2023 – 24ம் ஆண்டுக்கான பட்ஜெட் நாளை காலை 10:00 மணிக்கு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டை தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் வெளியாகுமா என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். தமிழ்நாடு சட்டப்பேரவை காலை 10 மணிக்கு கூடியதும் தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டினை தாக்கல் செய்து பட்ஜெட் உரையை வாசிப்பார்.
இந்த பட்ஜெட்டில் கீழ்காணும் அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ரூ.1,000
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பரப்புரையின் போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2023-24ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ரூபாய் 1000 குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று அறிவித்தார். இந்த திட்டத்தில் யார் யாருக்கு மாதம் ரூ.1000 கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கிடையே பயனாளிகளை தேர்வு செய்யும் பணிகளை அரசு நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது.
கேஸ் சிலிண்டருக்கு மானியமாக 100 ரூபாய் :
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சமையல் எரிவாயு கேஸ் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. தற்போதைய கேஸ் சிலிண்டர் விலை ரூ 1118 க்கு விற்கப்படுகிறது. எனவே தமிழ்நாடு அரசின் சார்பில் கேஸ் சிலிண்டருக்கு மானியமாக 100 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த திட்டம் குறித்த அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையும் படியுங்கள்: தமிழ்நாடு பட்ஜெட்2023 – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நாளை தாக்கல்..!
காலை சிற்றுண்டி திட்டம் விரிவுபடுத்துதல்:
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சில மாநகராட்சிகள், நகராட்சிகள், தொலைதூர கிராமங்களில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மட்டும் காலையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்துவது தொடர்பாக அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.
மின்துறை தொடர்பான புதிய அறிவிப்புகள்:
மின்சாரத் துறை சார்பில் பல்வேறு புதிய திட்டங்கள் தமிழ்நாடு பட்ஜெட்2023-24ல் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. கடந்த நிதியாண்டில் மின் துறையில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் இருந்ததாகவும், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு நடவடிக்கைகளால் 200 கோடி ரூபாய்க்கான இழப்பை குறைத்திருப்பதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
சூரிய ஒளி மின் உற்பத்தி மூலம் 3,088 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்கு கிடைத்து வரும் நிலையில், அவற்றை 20ஆயிரம் மெகாவாட் வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையும் படியுங்கள்: மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் – தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி சந்திப்பு
மின்சார முறைகேடு, மின் இழப்பு போன்றவற்றை தடுக்க அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் , தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட மாதம் ஒருமுறை மின் கணக்கீடும் முறை, ஆண்டுதோறும் கட்டண உயர்வை தவிர்க்க மாற்று நடவடிக்கை குறித்த அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
ஆன்லைன் சூதாட்ட மசோதா
ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மீது தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பினார். இந்த மசோதா மீண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசு வருவாயை அதிகரிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநிலத்தின் வரி வருவாய் உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன்படி சொத்து வரி, பத்திரப்பதிவு கட்டணம், டாஸ்மாக் வரியை என பல வரிகள் உயர்த்தப்பட்டு மாநில அரசின் வருவாயை உயர்த்தி உள்ளது.
-யாழன்