“உலக பொருளாதாரத்தில் 3வது இடத்தில் இருக்கிறோம்” – பிரதமர் மோடி உரை!

​​நாம் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அப்போது எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையில் தொடர் முழக்கமிட்டு கடும் அமளியில் ஈடுபட்டனர். மேலும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியை பேச அனுமதிக்க வேண்டும் என்றும் மாநிலங்களவை எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் பிரதமர் மோடி தொடர்ந்து உரையாற்றினார். அப்போது, “நாட்டின் அனைத்து தரப்பு மக்களுக்குமான வளர்ச்சியை இந்த அரசாங்கம் கொடுத்திருக்கிறது அதை குடியரசுத் தலைவர் சரியாக சுட்டிக் காட்டி இருக்கிறார். இந்தியாவின் வளர்ச்சியில் இந்திய இளைஞர்களின் பங்களிப்பு மிக மிக முக்கியம். இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை தான் உலக நாடுகளை ஒப்பிடும் பொழுது மிகவும் அதிகம். குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தில், நடுத்தர வர்க்கத்தினர், கீழ் நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள், கிராமங்கள், விவசாயிகள், பெண்கள், அறிவியல், தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கி, இந்தியாவின் முன்னேற்றத்தை விரிவாக எடுத்துரைத்துள்ளார்.

அறிவியல் துறை விளையாட்டு துறை என அத்தனை துறைகளிலும் இந்தியா தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேறி வருகிறது. ஒப்பந்தங்களின் தாய் என்று வர்ணிக்கப்படக்கூடிய ஐரோப்பிய யூனியன் உடனான வர்த்தக ஒப்பந்தத்தை சமீபத்தில் நாம் நிறைவேற்றி இருக்கிறோம். இந்த அரசு மீது எதிர்க்கட்சிகள் நிறைய குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார்கள். அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக பதில் சொல்ல போகிறேன்.

விக்சித் பாரத் பயணத்தில், கடந்த ஆண்டுகள் நாட்டின் விரைவான வளர்ச்சிக்குரிய ஆண்டுகளாக இருந்துள்ளன. இது வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவிலும் மாற்றங்கள் ஏற்பட்ட ஒரு காலகட்டமாக இருந்துள்ளது. நாடு சரியான திசையில் அதிவேகமாக முன்னேறிச் செல்கிறது.

குஜராத்தில் நடந்த வைப்ரண்ட் இந்தியா நிகழ்ச்சியில் வளர்ந்த நாடான ஜப்பான் இந்தியாவின் செயல்பாடுகளை புகழ்ந்தது. ஜப்பான் தான் அந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் கூட்டாளியாக இருந்தது. ஆனால் இதே ஜப்பானை தான் நான் குஜராத் முதல்வராக இருந்தபோது போட்டியாக நினைத்தேன். இன்று, உலகின் முக்கியப் பொருளாதார நாடுகளில், இந்தியா குறிப்பிடத்தக்க உயர் வளர்ச்சியைப் பெற்று வருகிறது. விரைவான வளர்ச்சியும் குறைந்த பணவீக்கமும் ஒருங்கே அமைந்திருக்கும் இந்த அரிய நிலை, நமது பொருளாதாரத்தின் வலிமைக்கும் மீள்தன்மைக்கும் ஒரு சான்றாகும்.

நாங்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, ​​இந்தியா ‘பலவீனமான ஐந்து’ பொருளாதார நாடுகளில் ஒன்றாகக் கருதப்பட்டது. சுதந்திரம் பெற்ற நேரத்தில், நாம் உலகின் ஆறாவது பெரிய பொருளாதாரமாக இருந்தோம்.
இருப்பினும், இடைப்பட்ட ஆண்டுகளில் ஏற்பட்ட தவறான நிர்வாகத்தின் காரணமாக, நமது தரம் 11-வது இடத்திற்குச் சரிந்தது. இப்போது, ​​நாம் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலத்திற்கான இலக்குகளோ அல்லது அதற்கான நோக்கங்களோ எதுவுமே இருந்தது இல்லை. எதிர்காலத்தை கருத்தில் கொண்டே வர்த்தக ஒப்பந்தங்களில் புரட்சி செய்து வருகிறோம். நாங்கள் செய்த ஒப்பந்தத்தை போல யாராவது செய்துள்ளார்களா?

நாம் செய்துள்ள ஒப்பந்தத்தால் உலக சந்தைகள் இந்தியாவிற்காக திறந்து உள்ளது. எதிர்க்கட்சிகளின் தரம் தாழ்ந்த செயல்பாடுகள் எனக்கு கவலையை கொடுக்கிறது. எத்தனை ஆண்டுகள் அனுபவம் இருந்தும் மிக மோசமாக நாடாளுமன்றத்தில் நடந்து கொள்கிறார்கள். நாட்டின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் நாடாளுமன்றத்தில் இவ்வளவு மோசமாக எதிர்க்கட்சிகள் நடந்து கொள்கின்றனர். வளர்ச்சி குறித்து தெரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான் இன்றைய தினம் அவர்கள் வெளிநடப்பும் செய்து இருக்கிறார்கள். நாட்டின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் நாடாளுமன்றத்தில் இவ்வளவு மோசமாக எதிர்க்கட்சிகள் நடந்து கொள்கின்றனர்.

வங்கித் துறைகளில் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு மிகவும் புத்திசாலித்தனமான சீர்திருத்தங்களை மேற்கொண்டு இருக்கிறோம். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வங்கிகள் கடனில் மூழ்கி இருந்தது தான் வங்கி துறையில் அவர்கள் செய்த சீர்திருத்தம். ஒட்டுமொத்த வங்கித் துறையும், பொது துறைகளையும் சீரழித்து வைத்திருந்தது காங்கிரஸ் அரசாங்கம் அதை நாங்கள் வந்து தான் சரி செய்து இருக்கிறோம். முத்ரா திட்டம் மூலம் 30 லட்சம் மக்களுக்கு கடன் என்பது கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் பெண்கள் பலனடைந்து இருக்கிறார்கள். காங்கிரஸ் காலத்தில் பணக்காரர்களுக்கு மட்டுமே வங்கி கடன்கள் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது ஏழைகள் வங்கி கடன்களை பெற்று வருகிறார்கள்.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வாராக் கடனில் சிக்கி இருந்த வங்கிகளை மீட்டெடுத்து வாராக்கடன்களின் விகிதத்தை ஒரு சதவீதமாக குறைத்து இருக்கிறோம். இந்தியாவிலேயே பொருட்கள் தயாரிக்கப்படுவது என்பது ஒரு காலத்தில் கனவாகவே இருந்தது. ஆனால் இப்போது Make in India என்பதை நனவாக்கி இருக்கிறோம். இந்திய விவசாயிகளை கைவிட்ட கட்சி தான் காங்கிரஸ். பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் மூலம் இந்திய விவசாயிகளுக்கு தேவையான உதவிகள் செய்து கொடுக்கப்படுகிறது. இதனால் இந்தியாவின் சிறு விவசாயிகள் பெரும் பலனை அடைந்து வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.