திருச்சி காவல் நிலையத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக திமுகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட 4 நிர்வாகிகள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
திருச்சி மாவட்டம் எஸ்.பி.ஐ காலனியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள டென்னிஸ் அரங்கத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு திறந்து வைத்தார். முன்னதாக விழா அழைப்பிதழ் மற்றும் பேனரில் திருச்சி சிவாவின் பெயர் இடம் பெறவில்லை என்று அவரது ஆதரவாளர்கள் அமைச்சர் கே.என்.நேருவின் காருக்கு கருப்பு கொடி காட்டியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், எம்.பி திருச்சி சிவாவின் வீடு மற்றும் கார் மீது கல்வீசியும், கட்டைகளை கொண்டும் சிலர் தாக்குதல் நடத்தினர். தாக்குதல் தொடர்பாக திருச்சி சிவா எம்.பி. தரப்பில் எவ்வித புகாரும் அளிக்கப்படாத நிலையில் அமைச்சர் கே.என் நேரு தரப்பில் செசன்ஸ் நீதிமன்ற காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் கருப்பு கொடி காட்டிய 11 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது, திடீரென 20-க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தில் புகுந்து அவர்களை தாக்க முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தாக்குதலை தடுத்த பெண் காவலரின் கையில் காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படாத வகையில் திருச்சி சிவா எம்.பி வீடு முன்பாக போலீசார் குவிக்கப்பட்டனர்.
தாக்குதல் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த திருச்சி சிவாவின் மருமகன் கராத்தே முத்துக்குமார், வன்முறையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யாமல் போலீசார் தங்கள் தரப்பினரை மட்டும் கைது செய்துள்ளதாக குற்றச்சாட்டினார். திருச்சி மாவட்டத்தில் சில தலைவர்கள் நிர்வாகிகளை தூண்டிவிட்டு இது போன்ற தாக்குதல் நடத்துவது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறினார்.
இதனையடுத்து திமுக வின் பொதுச் செயலாளர் துரைமுருகன் “திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைச் செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், மாவட்ட துணைச் செயலாளர் முத்துசெல்வம் உள்ளிட்ட 4 பேரை தற்காலிகமாக நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் திருச்சி காவல் நிலையத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக திமுகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட 4 நிர்வாகிகள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் திருச்சி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
– யாழன்







