டி 20 உலககோப்பை ; பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்குவீர்களா……..? – சூர்யகுமார் யாதவ் அளித்த பதில்……!

டி 20 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 27 வது லீக் ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

10 வது டி 20 உலககோப்பை கிரிக்கெட் தொடரானது இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை தலைநகர் கொழும்புவில் நாளை நடைபெறும் 27வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

பகல்காம் தாக்குதல் எதிரொலியாக கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியின் போது பாகிஸ்தான் அணி வீரர்களுடன் கைகுலுக்குவதை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்தியா அணி தவிர்த்தது. இது அப்போது பெரும் சர்ச்சையானது. இந்த நிலையில் நாளை நடைபெறும் உலககோப்பை லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர்களிடம் இந்திய வீரர்கள் கைகுலுக்குவார்களா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் உடல்நலக்குறைவு காரணமாக நமீபியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா விளையாடவில்லை. அப்ஷேக் சர்மாவும் நாளைய ஆட்டத்தில் களமிரங்குவாரா என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இந்த நிலையில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி கேப்டன்கள் கொழும்புவில் செய்தியார்களை சந்தித்தனர். அப்போது இந்திய அணி வீரர் அபிஷேக் சர்மா குறித்து பதிலளித்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி அஹா, “நாளை நடைபெறும் ஆட்டத்தில் இந்திய வீரர் அபிஷேக் சர்மா களமிறங்கி ஆடுவார் என நான் எதிர்பார்க்கிறேன். அபிஷேக் சர்மா மிகச்சிறந்த வீரர் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். சிறந்த இந்திய அணிக்கு எதிராக விளையாட நாங்கள் விரும்புகிறோம். உடல்நலம் முன்னேறி அவர் நாளை நடைபெறும் ஆட்டத்தில் விளையாடுவார் என நான் நம்புகிறேன்” என்றார்.

இதனை தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அபிஷேக் சர்மா குறித்து பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த சூர்யகுமார், அபிஷேக் சர்மா நாளைய ஆட்டத்தில் விளையாடவேண்டுமென பாகிஸ்தான் விரும்பினால் அவர் நிச்சயம் விளையாடுவார்’ என்றார்.

தொடர்ந்து நாளைய ஆட்டத்தின்போது பாகிஸ்தான் வீரர்களிடம் இந்திய வீரர்கள் கைகுலுக்குவார்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் “24 மணி நேரம் காத்திருங்கள். நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடுவோம். அதன்பின் இது குறித்து முடிவு செய்வோம். நீங்கள் நன்றாக தூங்குங்கள்.நன்றாக சாப்பிடுங்கள். 24 மணி நேரம் காத்திருங்கள்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.