இயற்கை உணவு உண்டு உடல் நலனை காக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டு வருவது போல் இயற்கை விவசாயம் செய்து வேளாண் நிலங்களைக் காக்க வேண்டும் என்கிற எண்ணம் விவசாயிகளிடம் மேலோங்கி வருகிறது. கொரோனா பேரிடர் ஏற்படுத்திய தாக்கத்திற்கு பின்னர், மனிதனுக்கு தேவையானது உணவு பாதுகாப்பு மட்டுமல்ல, ஊட்டச்சத்து பாதுகாப்பும் அவசியம் என்கிற கருத்தும் உன்னிப்பாக உலகமெங்கும் கவனிக்கப்படுகிறது.
இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்துவோம் என திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வாக்குறுதியை நிறைவேற்றி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தற்போது அங்கக வேளாண் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. சுற்றுச் சூழலை பாதுகாக்க ஏற்கனவே மீண்டும் மஞ்சப்பை போன்ற முன்னோடி திட்டங்களை செயல்படுத்திய திமுக அரசு தற்போது இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்த அங்கக வேளாண் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விவசாயிகளின் நலன், நுகர்வோர்களின் உடல் ஆரோக்கியம், பல்லுயிர் பெருக்கம், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, பாரம்பரிய விதைகள் பாதுகாப்பு, பன்மயம் என பல்வேறு பலன்களை அளிக்கக்கூடிய இயற்கை விவசாயத்திற்கென தனிக் கொள்கையை அறிவிக்க வேண்டும் என்பது கடந்த 15 ஆண்டுகளாகவே விவசாயிகள் வைத்து வரும் கோரிக்கை. அந்த கோரிக்கையை தமது ஆட்சியில் தற்போது நிறைவேற்றி இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
பூச்சிக்கொல்லிகள், செயற்கை உரங்கள் பயன்படுத்துவது போன்றவற்றை தவிர்த்து இயற்கை உரங்களை பயன்படுத்தி பயிர்களை விளைவிக்கும் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு காரணமாக, உலகெங்கிலும் 187 நாடுகளில் தற்போது இந்த நடைமுறை பின்பற்றப்பட்டுவரப்படுகிறது. கடந்த 2021ம் ஆண்டு எடுத்த சர்வேபடி மொத்தம் 7.23 கோடி ஹெக்டேர் வேளாண் நிலங்களில் இயற்கை முறையில் விவசாயம் நடைபெறுகிறது. உலகமெங்கிலும் சுமார் 31 லட்சம் விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருவதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இயற்கை விவசாயம் அதிகம் நடைபெறும் நாடுகளில் முதலிடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது. அங்கு 3.6 கோடி ஹெக்டேர் நிலத்தில் இயற்கை விவசாயம் நடைபெறுகிறது. அதற்கு அடுத்தபடியாக அர்ஜென்டியாவில் 36.3 லட்சம் ஹெக்டேரிலும், ஸ்பெயினில் 23.5 லட்சம் ஹெக்டேரிலும் இயற்கை விவசாயம் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் 23 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலத்தில் இயற்கை விவசாயம் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் இயற்கை பானங்களின் விற்பனையும் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. கடந்த ஆண்டு 2019 ஆண்டே இயற்கை உணவுப் பொருட்கள் மற்றும் இயற்கை பானங்கள் 9,32,058 கோடி ரூபாய் அளவிற்கு விற்பனையானதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
தமிழ்நாட்டில் இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தியதிலும், மண் வளம் காக்க, பாரம்பரிய விதைகளை பாதுகாக்க போராடியதிலும் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு அளப்பரிய பங்கு இருக்கிறது. 60க்கும் மேற்பட்ட இயற்கை விவசாய பயிற்சி மையங்களை தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் நிறுவியதில் தொடங்கி ஏராளமான முன்னெடுப்புகளை இயற்கை விவசாயம் காக்க முன்னெடுத்திருக்கிறார் இந்த சுற்றுச்சூழல் சுடரொளி.
தமிழ்நாட்டில் இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் முக்கிய கட்டமாக தற்போது அங்கக வேளாண் கொள்கையை திமுக அரசு வெளியிட்டுள்ளது. வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் அங்கக வேளாண் கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்திடவும், நஞ்சற்ற இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையிலும் “தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை 2023” வெளியிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்த வேளாண்மைத் துறையில் தனியே ஒரு பிரிவு உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தார். ஆட்சிக்கு வந்ததும் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அவர் நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி கடந்த 2021-2022ஆம் ஆண்டிற்கான வேளாண்மை – உழவர் நலத்துறையின் நிதிநிலை அறிக்கையின்போது, “அதிக அளவு பயன்படுத்தப்பட்ட இரசாயன உரங்களாலும், பூச்சிக் கொல்லி மருந்துகளாலும் மண்ணிலுள்ள நுண்ணுயிர்கள், மண்புழுக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து மண்வளம் பாதிக்கப்பட்டதோடு சுற்றுப்புறச்சூழலும் பாதிக்கப்பட்டுள்ளது.
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கக்கூடிய, இயற்கை வேளாண் விளைபொருட்களின் தேவையும் விழிப்புணர்வும் மிக அதிகமாக ஏற்பட்டுள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு, இயற்கை வேளாண்மை தொடர்பான பணிகளை சிறப்புக் கவனத்துடன் செயல்படுத்துவதற்கு, “வேளாண்மைத் துறையில் இயற்கை வேளாண்மைக்கென்று தனிப் பிரிவு ஒன்று உருவாக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டு உரிய ஆணைகள் வெளியிடப்பட்டன.
அதன் முதற்கட்டமாக, அங்கக வேளாண்மை வரைவுக் கொள்கையை உருவாக்குதற்காக வேளாண்மை – உழவர் நலத் துறையின் அரசு சிறப்புச் செயலாளர் தலைமையில் ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டு, அங்கக வேளாண்மைக் கொள்கையினை வரையறுப்பதற்காக குழுக்கூட்டங்கள் அவ்வப்போது நடைபெற்றன என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அக்கூட்டங்களில், அங்கக வேளாண்மைக் கொள்கையினை வகுப்பதற்கான பல்வேறு திட்டப் பணிகள் குறித்து, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர், துறைத் தலைவர்கள், முன்னணி அங்கக விவசாயப் பிரிதிநிதிகள் மற்றும் அங்கக வேளாண்மை சார்ந்த அரசு சாரா நிறுவனத்தினர் ஆகியோர்களின் ஆலோசனைகள், பிற மாநிலங்களில் அங்கக வேளாண்மையில் கையாளப்பட்டுவரும் நடைமுறைகள், அதன் சாதக பாதகங்கள் போன்றவை குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகவும் அதனடிப்படையில் வரைவு அங்கக வேளாண்மை கொள்கை, செயல்திட்டம் மற்றும் விதிமுறைகள் ஆகியன உருவாக்கப்பட்டதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதன்மூலம், அங்கக வேளாண்மையின் முக்கியத்துவத்தை தமிழ்நாட்டு விவசாயிகளிடையே அதிகரித்தல், நிலங்களில் இராசயன இடுபொருட்களின் பயன்பாட்டினை படிப்படியாக குறைத்து, இயற்கை இடுபொருட்களை அதிகளவில் பயன்படுத்துதல், மண் வளத்தை மேம்படுத்துதல் போன்றவற்றிற்கு தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை வழிவகுக்கும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.