முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணித்த ரயிலில் பெண் ஒருவர் அபாய சங்கிலியை தவறாக பிடித்து இழுத்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டது.
’கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வேலூர் மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். முதல் நாளான பிப்ரவரி 1ம் தேதி பேராசிரியர் அன்பழகன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 784 கோடிக்கு பள்ளிகள் உள்கட்டமைப்பு கட்டடங்கள் கட்ட அடிக்கல் நாட்டினார். அதன் பின் மாலை அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்ட ஒழுங்கு குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் மற்றும் மாவட்ட ஆட்சியர் உடன் ஆலோசனை நடத்தினார்.
அதன் பிறகு வேலூர், ராணிப்பேட்டை திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்களுடன், தலைமை செயலர் இறையன்பு அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் வேலு, அமைச்சர் பொன்முடி, அமைச்சர் காந்தி உள்ளிட்ட 150-க்கு மேற்பட்ட அரசு அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நேற்று காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தில் குடிநீர் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், வருவாய்த் துறை வழங்கக்கூடிய சேவைகள், ஊரக மேம்பாடு, நகர்ப்புற வளர்ச்சி, சாலை மேம்பாடு, வாழ்வாதாரத்தை உயர்த்துதல், இளைஞர் திறன் மேம்பாடு, பொதுக் கட்டமைப்பு வசதிகள், கல்வி, மருத்துவம், குழந்தைகள் ஊட்டச்சத்து போன்ற முக்கிய துறைசார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் அவற்றின் பயன்கள் பொதுமக்களுக்கு முழுமையாகச் சென்றடைவது குறித்தும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
இதன் பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூரில் இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று இரவு 7 மணிக்கு காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து தன்பாத் விரைவு ரயிலில் சென்னை திரும்பினார்.
ரயில் திருவலம் அடுத்த முகுந்தராயபுரம் நோக்கி சென்று கொண்டிருக்கும்போது ரயிலில் பயணித்த பெண் ஒருவர் தனது லக்கேஜ் பேக்கை எடுக்கும் போது தவறுதலாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்துள்ளார்.
இதனால் ரயில் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே நின்று சென்றது. அதன் பின்னர் இரயில்வே காவல்துறை விசாரணை நடத்தியதில் பெண் ஒருவர் தவறுதலாக இழுத்தது தெரிய வந்தது. அதன் பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பயணத்தை மேற்கொண்டு சென்னை வந்தடைந்தார். முதலமைச்சர் சென்ற இரயிலில் பெண் அபாய சங்கிலியை தவறுதலாக பிடித்து இழுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
– யாழன்