பாதயாத்திரை சென்ற ஐயப்ப பக்தர்கள் குழு மீது வேன் மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு!

தேனியில் இருந்து சபரிமலைக்கு பாதயாத்திரையாக சென்ற ஐயப்ப பக்தர்கள் குழு மீது சபரிமலை நோக்கிச் சென்ற வேன் மோதி இருவர் உயிரிழந்துள்ளனர்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த 8 பேர் கொண்ட ஐயப்ப பக்தர்கள் குழு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தேனியில் இருந்து பாதயாத்திரையாக நடந்து சென்றுள்ளனர். இதனிடையே நேற்று இரவு வீரபாண்டியில் ஓய்வெடுத்து விட்டு பின்னர் அதிகாலை 4 மணி அளவில் பாதயாத்திரையை தொடர்ந்துள்ளனர். அப்போது திண்டுக்கல் – குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சீலையம்பட்டி பகுதி அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது திண்டுக்கல் வேடசந்தூரில் இருந்து ஐயப்பன் பக்தர்களை ஏற்றிக் கொண்டு சபரிமலை நோக்கிச் சென்ற வேன் பாதயாத்திரை சென்ற ஐயப்ப பக்தர்கள் குழுவினர் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த குமார் (55), ராம்கி (36) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நல்வாய்ப்பாக மற்றவர்கள் அனைவரும் காயம் ஏதும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வேன் ஓட்டுநர் தினேஷ்குமார் (34) என்பவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். தொடர்து விபத்தில் உயிரிழந்த குமார் மற்றும் ராம்கி ஆகிய இருவரின் உடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த ராம்கி சலவை தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இவருக்கு ஜோதி என்ற மனைவியும் இரு மகன்களும் உள்ளனர். குமார் என்பவர் மெடிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார் இவரின் மனைவி கல்பனா தேவி தேனி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.