திமுக ஆட்சிக்கு வந்த பின் சட்டம் ஒழுங்கு பிரச்னை சரிசெய்யப்பட்டு தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அடுத்த சில நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து முடிந்தது. இதையடுத்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 20ஆம் தேதி பொதுபட்ஜெட்டும், மார்ச் 21ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் துறைரீதியான மானியக்கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சட்டப்பேரவை கூட்டத் தொடரின் நிறைவு நாளான இன்று காவல் துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் 2வது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளித்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:
மக்களுக்கு நேரடியாக தினமும் பலன் தரும் அரசாக தமிழ்நாடு அரசு செயல்படுகிறது. அவதூறுகளை யார் வீசினாலும், திசைத்திருப்பும் திருகு வேலைகளை யார் செய்தாலும், மக்கள் மனங்களை யாராலும் மாற்ற முடியவில்லை. ஏமாற்றவும் முடியவில்லை. தேர்தலில் மட்டும் வெல்லவில்லை.மக்கள் மனங்களையும் வென்றிருக்கிறோம். இது தனிப்பட்ட ஸ்டாலின் அரசு அல்ல. திமுக என்ற தனிப்பட்ட கட்சியின் அரசு அல்ல. இனத்தின் அரசாக 8 கோடி மக்களின் அரசாக உள்ளது. திராவிட மாடல் அரசாக உள்ளது.
அதனால் தான் மகளிருக்கு பேருந்துகளில் கட்டணமில்லா பயணவசதி செய்து தந்ததன் மூலம் 250 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளார்கள். மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் செப்டம்பர் மாதம் முதல் தரப்போகிறோம்.
1 கோடி பேருக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது ரூ.62,000 கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறையை நடப்பாண்டில் ரூ.30,000 கோடியாக குறைத்துள்ளோம். தமிழ்நாட்டை நோக்கி ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான புதிய தொழில்களை ஈர்த்துள்ளோம். மாநில உள்நாட்டு உற்பத்தி 6.11 விழுக்காடாக உயர்ந்துள்ளது. வேளாண் உற்பத்தி அதிகரித்து பாசன பரப்பும் அதிகரித்துள்ளது.
சில காவலர்களின் செயல்பாடுகள் குறித்து விமர்சனங்கள் வைக்கப்பட்டன. காவல்துறை செயல்பாட்டில் குற்றம் குறைகள் இருக்கலாம். குறையே இல்லை என்று சொல்லமாட்டேன். குறை கண்டுபிடிக்கப்பட்டதும் அவை திருத்தப்பட்டதே தவிர கண்டும் காணாமல் விடப்படவில்லை. எந்த குற்றவாளியையும், அது யாராக இருந்தாலும், எப்படிப்பட்ட கொம்பனாக இருந்தாலும் நிச்சயமாக அவர்களை காப்பற்ற மாட்டோம் என்று உறுதியாக கூறுகிறேன். சிறுசிறு தவறுகள் நடந்திருந்தாலும் அதனை திருத்திக் கொள்ளும் பண்பை காவல்துறையினரை பெற்றுக் கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் சாதி சண்டைகள் இல்லை. மத சண்டைகள், கூட்டு வன்முறைகள், கலவரங்கள், துப்பாக்கிச்சூடு இல்லை. இப்படி இல்லை இல்லை என்று தான் என்னால் சொல்ல முடியும். இதெல்லாம் இல்லாத காரணத்தினால் புதிய தொழிற்சாலைகள் வருகின்றன. அரசுக்கு நற்பெயர் வருகிறது. பொதுமக்களிடம் அச்சம் உணர்வை போக்கியிருக்கிறது அரசு. எந்த வித குறுக்கீடுமின்றி காவல்துறையை செயல்பட அனுமதித்துள்ளோம். குற்றத்திற்கு தக்க தண்டனை வழங்குதலே நீதி என்ற வள்ளுவன் வழியில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
குற்றம் செய்தவர்கள் யாராலும் இருந்தாலும் பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சாதி சண்டை பூசல் இன்றி தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்கிறது. கொலை, கொள்ளை குற்றங்களில் ஈடுபடுவோர், லாட்டரி விற்பனை, ரேசன் அரிசி கடத்தல், வட்டி வசூலித்தல் போன்றவர்களில் ஈடுபடுவோர் மீது கடுமையாக நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். அதற்கு வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக எழுந்த வதந்தி மீது அரசு எடுத்த நடவடிக்கையே உதாரணம். சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்பிய நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
பாஜகவை சேர்ந்தவர் மீதும் வழக்கு தொடர்ப்பட்டது, யூடியூப் சேனல் நடத்தி வந்தவர் தேசிய பாதுகாபபு சட்டத்தில் அடைக்கப்பட்டார். சமூகவலைதளங்களில் பரவும் வதந்தி உலகளவில் பெரிய பிரச்னையாக மாறும் உலகில் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளை பத்திரிகைகள் பாராட்டின. வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்தோரை தன் விருந்தினராக கருதி அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன.
நேற்று எதிர்க்கட்சித்தலைவர் பேசும் போது ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு பற்றி பேசினார். 100 நாள் அமைதியாக நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார் ? அதை மட்டும் ஏன் எடப்பாடி பழனிசாமி சொல்லவே மாட்டேங்கிறார்.
காவல்நிலைய மரணங்களை தடுப்பதில் இந்த அரசு சாதனை படைத்துள்ளது. கடந்த ஆட்சியை ஒப்பிடும் போது காவல்நிலைய மரணங்கள் குறைந்துவிட்டன. குற்றங்களை தடுப்பதே அரசின் இலக்கு. மீறி அங்கும் இங்கும் நடக்கும் குற்றங்களில் குற்றவாளிகள் உடனுக்குடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் சம்மந்தப்பட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டனர். மூன்றே நாளில் இது போன்ற வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றியது தமிழ்நாடு அரசு தான். கோவை பாதுகாப்பை கருதி பல்வேறு பகுதிகளில் புதிய காவல்நிலையங்கள் அமைக்க, கூடுதல் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த முடிவெடுக்கப்பட்டன. மத ரீதியிலான மோதல் இன்றி தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்ந்து வருகிறது.
2021 – 2022 – ஆகிய ஆண்டுகளில் 182 ஆதாயக்கொலை வழக்குகளில் 171 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 282 கூட்டு கொள்ளை வழக்குகளில் 242 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 874 வன்புணர்வு வழங்குகளில் 849 வழக்குகளில் எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆரூத்ரா போன்ற நிதி நிறுவனங்கள் மக்களிடம் ஆசையை தூண்டி ஏமாற்றுகின்றன. இத்தகையை நிதிநிறுவனங்களை கண்காணிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். பொதுமக்கள் எச்சரிக்கையுடன் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
- பி.ஜேம்ஸ் லிசா










