சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுமார் 1.5 கிமீ உயரத்திலிருந்து 4.5 கிமீ உயரம் வரை காற்றழுத்த தாழ்வு பகுதியின் மையப்பகுதிகளிலிருந்து தெற்கு லட்சத்தீவு பகுதிகள் வரை, தென் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
சுமார் 0.9 கிமீ உயரத்தில், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 0.9 கிமீ உயரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள லட்சதீவு பகுதிகளிலிருந்து மரத்வாடா வரை கடலோர கர்நாடகா வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் லேசான மழை நிலவக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் லேசான மழை நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.







