மதுரையில் மாடுதான் பிடிப்பார்கள் என்றும், ஆனால் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு புலி வாலை பிடித்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்ததால் சட்டப்பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில், கேள்வி நேரத்தின்போது, மதுரையில் எந்த தொழிலும் இல்லாத நிலையில், மெட்ரோ வந்து என்ன பயன் என கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரையில் ஒரு தொழிற்சாலை கூட சொல்லும் அளவுக்கு இல்லை. நம்முடைய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொழிற்பேட்டையை தொடங்கினால் மதுரை முழுவதும் ஆஹா ஓஹோ என்று பாராட்டபடுவீர்கள் என தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் செய்யாததை தற்போது செய்வீர்களா என்று முன்னாள் அமைச்சர் கேள்வி எழுப்புவதாக தங்கம் தென்னரசுவை நோக்கி கூறினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, மதுரை மக்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களே அண்ணனை பார்த்து ஆஹா ஓஹோ என்றுதான் பேசிகிட்டு இருக்காங்க. நானே அவரை பார்த்து அசந்துபோனேன்.
கொஞ்ச நாளைக்கு முன்னாள் அவர் புலி வாலை பிடித்திருப்பதுபோல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். நாமெல்லாம் புலியை பார்த்தால் தூர ஓடிப்போவோம். ஆனால் அண்ணன் மட்டும் தைரியமாக புலி வாலை பிடித்திருந்தார். மதுரையில் எல்லோரும் மாடுதான் பிடிப்பார்கள், செல்லூர் ராஜூ அண்ணன் மட்டும் புலி வாலையே பிடித்து வந்து நின்னார். ஆனால் ஒன்னு மதுரைக்காரங்க ரொம்ப விவரமானவங்க. புலி வாய் இருக்கும் பக்கமா நிக்காமல் புலி வால் இருக்குற பக்கமா பாத்து அண்ணன் செல்லூர் ராஜு பிடித்து இருந்தார்.
மேலும், புலியின் வாயை பிடிக்காமல், வாலை பிடித்துள்ளதில் இருந்து அவரின் வீரம் தெரிகிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியபோது அவையில் சிரிப்பலை ஏற்பட்டது. தொடர்ந்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, மதுரையில் நிச்சயமாக புதிய தொழில்பேட்டைகள் தொடங்கப்படும் என உறுதியளித்தார்.
- பி.ஜேம்ஸ் லிசா









