மதுரை சித்திரை திருவிழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: அமைச்சர் சேகர்பாபு

மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழா கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு மிகச் சிறப்பாக நடைபெறும் என்றும், அதற்கான அனைத்து பாதுகாப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு…

மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழா கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு மிகச் சிறப்பாக நடைபெறும் என்றும், அதற்கான அனைத்து பாதுகாப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

2023-24 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பினை நிறைவேற்றும் வகையில் மாற்றுத்திறனாளிகள் திருமணத்திற்கு, தங்கத்தாலி வழங்கும் திட்டம் தொடக்க விழா, சென்னை கோயம்பேடு அருள்மிகு குறுங்காலீஸ்வரர் திருக்கோயில் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழ்நாட்டில் முதல்முறையாக இந்தத் திட்டத்தை சென்னை கோயம்பேட்டில் தொடங்கி வைத்து, 2 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு இலவச திருமணத்தையும் நடத்தி, அவர்களுக்கு தங்க தாலி உட்பட, சீர்வரிசைகளையும் வழங்கினார்.

இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இருக்கும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறுவதற்கு வருவாய், மின்சாரம், பொது பணித்துறை, போக்குவரத்து, காவல்துறை என 6 துறைகள் சார்ந்த அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியின் போது நெரிசல் இல்லாமல் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

சித்திரை திருநாள் அன்று திருக்கோயில் திருத்தேர் சாலையில் செல்லும் போது, மின்சாரத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டுவிடாத வகையில், மின்சார துறையுடன் சேர்ந்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் இந்த ஆண்டு சிறப்பாக மதுரை சித்திரை திருவிழா நடைபெறும். கள்ளழகர் ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அதிகமாக வருவதால் கூடுதல் பேருந்தும் விடப்படும். சுற்று வட்டார கிராமங்களிலும் பக்தர்கள் எந்த ஒரு பாதிப்பின்றி திருக்கோயில் தரிசனம் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.