இயக்குநர் கிட்டு இயக்கியுள்ள படம் சல்லியர்கள். இலங்கை தமிழர் போராட்டத்தில் மருத்துவ பணி செய்த சல்லியர்கள் என்ற அணி குறித்தும், அவர்களின் மனிதாபிமானம், கடமை, அவர்கள் பட்ட கஷ்டங்கள், பாதிப்புகள் குறித்தும் மருத்துவத்துறை பின்னணியில் இந்த கதை அமைக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 1ம் தேதி இந்த படம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது இருந்தது. இந்நிலையில், சல்லியர்கள் திரைப்படத்திற்கு தியேட்டர் கிடைக்கவில்லை என்றும் அதனால் இந்த படத்தை திரையிட முடியவில்லை. என்றும் தயாரிப்பளர் சுரேஷ்காமாட்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில்,
”சல்லியர்கள் திரைப்படமானது இலங்கை தமிழர் போராட்டத்தின் போது உறுதுணையாக இருந்த மருத்துவ உதவி செய்தவர்கள் பற்றிய கதை, அவர்கள் சல்லியர்கள் என அழைத்தனர். காயம்படுபவர்களுக்கு உதவி செய்தல், உயிரை காப்பாற்றுதல், மருத்துவ முன்னேற்பாடுகளை செய்வது அவர்களின் கடமை. தங்கள் வீரர்கள், எதிரி எணி வீரர்கள் என பாகுபாடு பார்க்காமல் அவர்கள் மருத்துவபணி செய்தனர்.
இந்த படம் ஜனவரி 1 ரிலீஸ் சில நாட்களுக்கு முன்பே அறிவித்துவிட்டோம். ஆனால், தமிழகத்தில் எங்களுக்கு வெறும் 27 தியேட்டர் மட்டுமே கிடைத்து இருக்கிறது. குறிப்பாக, தமிழகத்தில் இருக்கும் ஒரு கார்ப்பரேட் தியேட்டர் நிறுவனம் எங்களுக்கு தியேட்டர் ஒதுக்கவில்லை.
ஒரு நல்ல தமிழ்ப்படத்தை, சென்சார் செய்த படத்தை தமிழகத்தில் திரையிட முடியாத நிலையில் உள்ளோம். மொத்தமாகவே எங்களுக்கு 27 திரையரங்குகள் மட்டுமே ஒதுக்கியிருக்கிறார்கள். . அதில் திரையிடுவதால் எனக்கு க்யூப் கட்டணம் கூட கிடைக்காது. அது ஏற்புடையதல்ல. தமிழகத்தில் தொழில் புரிய வந்திருக்கக்கூடிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தமிழ் சார்ந்த திரைப்படத்தை மறுப்பது எந்த விதத்தில் நியாயம். அந்தத் திரைப்படம் ஓடும், ஓடாது என்பதை முடிவு செய்வதற்கு நீங்கள் யார்? இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் இயக்குனர் சங்கம் எங்களுக்காக குரல் கொடுக்கவில்லை.
2013 ஆம் ஆண்டு கருணாஸ் நடித்திருந்த ரகளபுரம் திரைப்படம் தொடர்பாக 7 லட்சம் ரூபாய் கருணாஸ் கொடுக்க வேண்டி இருக்கிறது என கோயம்புத்தூரில் இருக்கக்கூடிய திரைப் பட விநியோக சங்கம் படத்தினை திரையிட மறுக்கின்றனர். இருப்பினும் அந்த 7 லட்சம் ரூபாயும் உரியவருக்கு கொடுத்தாயிற்று. இந்த விவகாரம் தொடர்பாக எந்த தயாரிப்பாளர் சங்கமும் பேச முன் வரவில்லை. தயாரிப்பாளர் பிரச்சனைகள் தொடர்பாக எவரும் வெளிப்படையாக பேசுவதில்லை.
சிறிய படங்கள் திரையரங்கில் வெளியிட மாட்டோம் என வெளிப்படையாக கூறி விடுங்கள். ஆண்டுக்கு 12 பெரிய படங்கள் மட்டுமே வருகின்றன. மற்றதெல்லாம் சிறு முதலீடு படங்கள். அதை தமிழ்நாட்டில் திரையிட மறுப்பது எந்தவகையில் நியாயம்” என்றார்.
மேலும் அவர் கூறுகையில் ”சல்லியர்கள் படத்தை ஓடிடியில் வெளியிட உள்ளோம். இந்த செய்தியின் வாயிலாக இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் சின்ன படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்றார்.







