நாவல்களை சுமந்து வரும் தமிழ் சினிமா: ஒரு புதிய பரிணாமம்

சமீப காலமாக தமிழ் சினிமா ஒரு புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது. எழுத்துலகில் இருந்து காட்சி உலகத்திற்கு நாவல்களின் வழியே தமிழ் சினிமா பயணப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக அலசுகிறது இந்த தொகுப்பு. மனிதன் இந்த…

சமீப காலமாக தமிழ் சினிமா ஒரு புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது. எழுத்துலகில் இருந்து காட்சி உலகத்திற்கு நாவல்களின் வழியே தமிழ் சினிமா பயணப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக அலசுகிறது இந்த தொகுப்பு.

மனிதன் இந்த பூமியில் பிறக்கும் போதே கதைகளும் பிறந்து விட்டன. ஒவ்வொரு மனிதனின் இன்பங்களும், துன்பங்களும், காதலும் , பிரிதலும் என மனித வாழ்வு நெடுக கதைகள் பல்கி பெருகியுள்ளன. மனிதனால் செயல் வடிவம் கொடுக்க முடியாமல் சிந்தனையில் ஊறிக் கிடக்கும் அனுபவங்கள் புனைவுகளாக இலக்கியங்களில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளன.

இலக்கியங்கள் மனித எண்ண ஓட்டங்களை அப்படியே பிரதிபலித்ததன் விளைவு நாவல்களும், புனைவுகளும் மனிதர்களிடம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தின. குரலற்றவர்களின் குரலாய், பாதிக்கப்பட்டவனின் வாக்குமூலங்களாய், கண்டுகொள்ளப்படாத இனத்தின் சாட்சிகளாக பேசியதால் இலக்கியங்கள் வலுவான ஊடகமாக கருதப்பட்டன.

இலக்கியங்கள் ஒற்றை வடிவமாக அப்படியே தேங்கி நின்று விடவில்லை. கல்வெட்டுகளில் இருந்து சுவடிகளுக்கும், சுவடிகளில் இருந்து தாள்களுக்கும், தாள்களில் இருந்து இ-புத்தகங்களுக்கும், இ-புத்தகங்களில் இருந்து ஸ்டோரி டெல் எனப்படும் ஒலி வடிவ கதைகளுக்கும் அவை பரிணமித்துள்ளன. இது தவிர எழுத்திலிருந்து சினிமாவிற்கு நேரடியாக காட்சிகளாக இலக்கியங்கள் சென்று பல நாட்கள் ஆகிறது.

ஜப்பானிய திரைப்பட இயக்குநர் அகிரா குரோசேவா 1950-ம் ஆண்டு இன் அ குரூவ் மற்றும் ரோஷமோன் ஆகிய கதைகளை தழுவி இயக்கிய “ரோஷமோன்” எனும் திரைப்படம் இன்றளவும் பேசு பொருளாக உள்ளது. அதனால்தான் இன்றைய சினிமா காதலர்களுக்கு அகிரா குரோசேவா முன்னோடியாக இருக்கிறார்.

இந்தியாவில் சமீப காலமாக தென்னிந்திய திரைப்படங்கள் அதிலும் குறிப்பாக பிராந்திய மொழிப்படங்கள் பெரிய அளவில் பேசப்பட்டு வருகின்றன. பல்வேறு கலாசாரங்கள் நிறைந்து வாழ்கிற ஒரு நாட்டில் அவரவர் கலாசார மற்றும் வாழ்வியலை பேசும் படங்கள் வணிகரீதியாகவும் வெற்றி பெறுவதை பார்க்க முடிகிறது.

வங்காள சினிமா பல நல்ல படங்களை தந்து கொண்டிருந்த காலத்தில் “பதேர் பாஞ்சாலி” எனும் புகழ்பெற்ற வங்காள இலக்கியத்தை சத்யஜித்ரே எனும் கலைஞன் மிக நேர்த்தியாக திரைப்படமாக்கினார். சத்யஜித்ரேயின் கலை நயத்தை பாராட்டி அவருக்கு வாழ்நாள் சாதனைக்கான “ஆஸ்கர் விருது” வழங்கி கௌரவிக்கபட்டது.

தென்னிந்திய சினிமாக்களில் பல நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் மலையாளத்தில் வெளியாகி தனக்கென தனி ரசிகர்களை கொண்டுள்ளது. மலையாளத்தில் வெளியான சில நாவல்கள் படங்களாக எடுக்கப்பட்டு வெற்றிகரமாக மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றன. 1956ல் தகழி சிவசங்கரன் பிள்ளை எழுதிய செம்மீன் எனும் நாவல் அதே பெயரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல மலையாள எழுத்துலகின் ஜாம்பவான் வைக்கம் முகம்மது பஷீரின் ஆகச் சிறந்த படைப்பான “பால்யகால சகி” எனும் நாவல் திரைப்படமாக எடுக்கப்பட்டது. மம்முட்டி , மீனா, இஷா தல்வார்  உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்த இப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

தமிழ் சினிமாவும் பல நல்ல கதையம்சங்களை கொண்டு திரைப்படமாக்கப்பட்டு உலக அளவில் கவனம் பெற்று வருகிறது. தற்போது தமிழ் இலக்கியத்தில் உள்ள காத்திரமான சில படைப்புகள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு முன்பும் சில படங்கள் தமிழ் நாவல்களை தழுவி எடுக்கப்பட்டன. தற்போது இயக்குநர் வெற்றிமாறனின் “விடுதலை”  மற்றும் இயக்குநர் மணிரத்னத்தின் ”பொன்னியின் செல்வன்” படங்கள் வெளியான பிறகு இதற்கான எதிர்பார்ப்புகள் சினிமா ரசிகர்களிடையே அதிக அளவில் எழுந்துள்ளன.

இதற்கு முன்பு தமிழ் சினிமாவில் நாவல்களை தழுவி எடுக்கப்பட்ட படங்கள்:

– உதிரிப் பூக்கள் திரைப்படம் புதுமைப் பித்தனின் “சிற்றன்னை” கதையை மையமாக கொண்டது.

– முள்ளும் மலரும் திரைப்படம் கல்கி இதழில் தொடராக வெளியான நாவலை தழுவி எடுக்கப்பட்டது

-சேரனின் “சொல்ல மறந்த கதை” திரைப்படம் எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் நாவலை மையமாக வைத்து எடுக்கபட்டுள்ளது.

-வெற்றிமாறன் இயக்கி உலக அளவில் பல விருதுகளை குவித்த “விசாரணை” படம் எம்.சந்திரகுமாரின் லாக்கப் நாவலை மையமாக கொண்டது.

-இயக்குனர் பாலா இயக்கி அதர்வா நடித்த “பரதேசி” படம் எரியும் பனிக்காடு  என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டது.

– வெற்றிமாறன் இயக்கி தனுஷ் நடித்து தேசிய விருது பெற்ற அசுரன் திரைப்படம் எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலை தழுவி எடுக்கப்பட்டது.

தற்போது தமிழ் சினிமாவில் நாவல்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு திரையில் ஓடிக் கொண்டிருக்கும் படங்கள் :

– மணிரத்னம் இயக்கியுள்ள வரலாற்று படமான “பொன்னியின் செல்வன்” கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டது.

– வெற்றிமாறன் இயக்கி சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்து திரையில் ஓடிக் கொண்டிருக்கும் ”விடுதலை” திரைப்படம் எழுத்தாளர் ஜெயமோகனின் “துணைவன்” நாவலை அடிப்படையாக கொண்டது.

-மு.களஞ்சியம் இயக்கியுள்ள “முந்திரிக்காடு” எனும் படம் எழுத்தாளர் இமையத்தின் “பெத்தவன்” நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களின் பல நல்ல படைப்புகளை திரைப்படங்களாக  தயாரிக்க பலர் முயற்சித்து அதில் வெற்றியும் கண்டுள்ளனர். நாவல்களை படமாக்குவதில் எழுத்தாளர்கள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர எழுந்துள்ளன. தமிழ் எழுத்துலகில் முக்கியமான எழுத்தாளரான இமையம் தயாரிப்பாளர்களின் வணிகத்திற்காக நாவலை சமரசம் செய்து திரைப்படமாக்குவது ஏற்புடையதல்ல என்றும் எனவே இதில் தனக்கு எப்போதும் உடன்பாடில்லை என ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

நாவல்கள் அப்படியே படமாக்கப்படுவதில்லை கதையின் கருவிலிருந்து உந்தப்பட்டு அதனை திரைப்பட பாணிக்கு ஏற்றவாறு படமாக தயாரிக்கின்றனர். எனவே இத்தகைய சினிமாக்கள் நாவலை அப்படியே பிரதிபலிப்பவை அல்ல. மாறாக நாவலை தழுவி எடுக்கப்படுகிறது என எழுத்தாளர் பவா செல்லத்துரை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

நல்ல கதைக் களங்களை மட்டுமல்லாமல் நல்ல இலக்கியங்களையும் தமிழ் சினிமா பிரதிபலிக்க தொடங்கி அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு நல்ல நாவலை போல தமிழ் சினிமாவும் கலை நயம் குன்றாமல் அதன் போக்கில் புதிய பரிணாமம் எடுத்து பயணிக்க தொடங்கியிருக்கிறது. இந்த பயணம் இங்கே தொடங்கவும் இல்லை. இந்த பயணம் இங்கேயே முடிவுறப் போவதும் இல்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.