திண்டுக்கல் மாவட்டம் பாச்சலூரில், பள்ளி மாணவியின் மர்ம மரணத்திற்குக் காரணமான குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்ததால், அங்கு பரபரப்பு நிலவியது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை கிராமத்தைச் சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவி, கடந்த 15ம் தேதி பள்ளி வளாகத்தில் உடல்கருகிய நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து ஏ.டி.எஸ்.பி லாவண்யா தலைமையிலான குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படாத நிலையில்,மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி திருச்சி சாலையில் வேளாளர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் ஹரிஹரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முயன்றதால் அங்கு தள்ளுமுள்ளு நிலவியது. பெண்கள் உள்ளிட்ட அனைவரையும் போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி, கைது செய்ததால் அங்கு பதற்றம் நிலவியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனிடையே கொடைக்கானல் வத்தலகுண்டு பிரதான சாலை மற்றும் ஏரிச்சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மேல்மலை மற்றும் கீழ்மலை ஊர் பொதுமக்கள் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.