ஒமிக்ரான் பாதிப்பு குறித்த தெளிவான தகவல்கள் இல்லாததால் மொத்த பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து மிகச்சரியாக குறிப்பிட முயாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் செய்தியாளர் சந்திப்பு கூட்டம் இணைய வழியாக நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், “2021ம் ஆண்டில் 3.5மில்லியன் மக்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இது கடந்த 2020ம் ஆண்டு HIV, மலேரியா, காசநோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும். கொரோனா தொற்றால் வாரத்திற்கு 50,000 பேர் உயிரிழக்கின்றனர்.
தற்போது வரை உயிரிழந்துள்ளவர்களில் பெரும்பாலானோர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களே. பூஸ்டர்களை செலுத்திக்கொள்ளாதவர்கள் அல்ல. தடுப்பூசி டெல்டா மற்றும் ஒமிக்ரான் வேறுப்பாட்டிற்கு எதிராகவும் சிறப்பாக செயல்படுகிறது என்பதை நாங்கள் தெளிவுப்படுத்த விரும்புகிறோம்.
எனவே உலக நாடுகள் 40% தடுப்பூசி இலக்கினை விரைவாக பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். தற்போது வரை உலக சுகாதார அமைப்பில் உறுப்பினராக உள்ள நாடுகளில் பாதி நாடுகள் மட்டுமே 40% மக்களுக்கு தடுப்பூசியினை செலுத்தியுள்ளன.
‘ஒற்றுமை சோதனை தடுப்பூசிகள்'(STV) மூலம் கொரோனா தொற்றுக்கு எதிரான அடுத்த தலைமுறை தடுப்பூசியை கண்டறியும் பணியை உலக சுகாதார அமைப்பு தொடங்கியுள்ளது.
உலக சுகாதார அமைப்பு, கொலம்பியாவின் சுகாதாரத்துறை அமைச்சகம், மாலி மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளின் ஒத்துழைப்புடன் ஒற்றுமை சோதனை தடுப்பூசிகள் முறை செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலமாக நீண்ட காலத்திற்கு செயல்திறன் கொண்டதாகவும், நீடில்கள் இல்லாத தடுப்பூசிகளையும் நாம் உருவாக்க முடியும்.” என்று கூறினார்.
‘ஒற்றுமை சோதனை தடுப்பூசிகள்’ (STV) என்பது உலகளாவிய மருத்துவ சோதனையாகும். இதன் மூலம் தொற்றுக்கு எதிராக புதிய தடுப்பூசிகளை உருவாக்க முடியும். மேலும் இதனை பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய முடியும்.
Media briefing on #COVID19 with @DrTedros https://t.co/UpfviKG6c4
— World Health Organization (WHO) (@WHO) December 22, 2021
இந்த சோதனைகள் மூலம் கிடைக்கப்பெறும் தகவல்கள் வலுவானதாகவும், நம்பகத்தன்மை கொண்டதாகவும் அதே நேரத்தில் உலகளாவியதாகவும் இருக்கும்.
இதனையடுத்து செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அமைப்பின் தொற்று நோயியல் நிபுணர் மரியா வேன் கெர்கோவே, “உலகம் முழுவதும் 106 நாடுகளில் ஒமிக்ரான் பரவியுள்ளது. மொத்த பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் குறித்து தெளிவான பதிவுகள் இல்லை” என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-சிறப்பு மொழி்ப்பெயர்ப்பு ஹேலி கார்த்திக்








