மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவசாயி குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு!

கள்ளக்குறிச்சியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவசாயி குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் நேற்று (டிச.28) விவசாயி ஒருவர் மின்மோட்டாரினை இயக்கும்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்ததுடன், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

“கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் வட்டம், பிரிதிவிமங்கலம் கிராமத்தில் வசித்து வந்த ராஜகோபால் (வயது 57) த/பெ.அய்யாக்கண்ணு என்பவர் நேற்று (28.12.2025) காலை சுமார் 9.00 மணியளவில் தனக்குச் சொந்தமான கிணற்றில் உள்ள விவசாய மின்மோட்டாரினை விவசாயத்திற்காக இயக்கும்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த ராஜகோபாலின் குடும்பத்தினருக்கு மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்”

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.