திருத்தணி ரயில் நிலையத்தில் சிறுவர்கள் கஞ்சா போதையில் இளைஞரை சரமாரியாக வெட்டிய சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
“திருத்தணி ரயில் நிலையத்தில் கஞ்சா போதையில் இளைஞரை சரமாரியாக வெட்டிய சிறுவர்கள்: போதைப் பொருள்களை கட்டுப்படுத்துவதில் திமுக படுதோல்வி!
சென்னையில் இருந்து திருத்தணி சென்ற வடமாநில இளைஞரை திருத்தணி தொடர்வண்டி நிலையத்தில் கஞ்சா போதையில் இருந்த 4 சிறுவர்கள் சரமாரியாக வெட்டி ரீல்ஸ் எடுத்து வெளியிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டின் சிறுவர்களையும், இளைஞர்களையும் சீரழித்து வரும் போதைப் பொருள்களை கட்டுப்படுத்த திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது. மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த சுராஜ் என்ற தொழிலாளி சென்னையில் இருந்து திருத்தணிக்கு மின்சார தொடர்வண்டியில் பயணம் செய்திருக்கிறார். திருவாலங்காடு தொடர்வண்டி நிலையத்தில் அந்த தொடர்வண்டியில் ஏறிய 4 சிறுவர்கள் கஞ்சா போதையில் தங்களிடமிருந்த அரிவாளை எடுத்து அவரை வெட்டுவது போல மிரட்டியுள்ளனர்.
அதை அவர்களில் ஒருவன் காணொலியில் பதிவு செய்திருக்கிறான். இதனால் அச்சமடைந்த சுராஜ், அவர்களை தடுத்து விட்டு, திருத்தணி தொடர்வண்டி நிலையத்தில் இறங்கியுள்ளார். ஆனால், அவரை விடாமல் துரத்திச் சென்ற சிறுவர்கள் தொடர்வண்டி நிலையத்தில் வைத்து அந்த இளைஞரை சரமாரியாக வெட்டி அதை காணொலியாக பதிவு செய்து இணையத்தில் பரவ விட்டுள்ளனர். படுகாயங்களுடன் மயங்கிக் கிடந்த இளைஞரை அங்குள்ள மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த நிகழ்வு குறித்த செய்தியை கேட்கும்போதே நெஞ்சம் பதறுகிறது; உடல் நடுங்குகிறது.
பள்ளி செல்ல வேண்டிய வயதில் உள்ள சிறுவர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகி பொதுமக்கள் முன்னிலையில் தொடர்வண்டியிலும், தொடர்வண்டி நிலையத்திலும் ஒருவரை அரிவாளால் வெட்டி படம் பிடித்து வெளியிடத் துணிகிறார்கள் என்றால் தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கமும், அதனால் ஏற்படும் தாக்கமும் எந்த அளவுக்கு பெருகியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். இந்த சீரழிவுக்கு முழுக்க முழுக்க திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் தமிழ்நாட்டில் கஞ்சா கலாச்சாரம் உச்சத்தை அடைந்தது. இது தொடர்பாக கடந்த 2022-ஆம் ஆண்டு மே மாதம் 29-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
அதைத் தொடர்ந்து 28.07.2022-ஆம் நாள் போதைப் பொருள்களில் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி எனது தலைமையில் போராட்டமும் நடத்தப்பட்டது. ஆனால், எந்த பயனும் இல்லை. தமிழ்நாட்டிற்கு ஆந்திராவிலிருந்து தான் அதிக அளவில் கஞ்சா கடத்தி வரப்படுகிறது என்பதால் எல்லையோர மாவட்டங்களில் அதன் புழக்கம் அதிகமாக இருக்கிறது என்றும், அதைத் தடுக்க வேண்டும் என்றும் மக்கள் உரிமை மீட்பு பயணத்தின் போது திருத்தணியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினேன். கடந்த வாரம் திருத்தணியில் நடைபெற்ற மகளிர் உரிமை மீட்புப் பயணத்தில் பேசிய பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் முனைவர் சவுமியா அன்புமணியும் இதே கருத்தை வலியுறுத்தினார்.
அடுத்த வாரத்திலேயே அதே திருத்தணியில் கஞ்சா போதையில் சிறுவர்கள் அட்டகாசம் செய்திருப்பதிலிருந்தே இந்த விஷயத்தில் திமுக அரசு எந்த அளவுக்கு செயலற்று கிடக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்து விட்ட திமுக அரசு, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களைக் கட்டுப்படுத்துவதில் படுதோல்வி அடைந்து விட்டது. அதனால் பொதுவெளிகளில் பொதுமக்கள் அச்சமின்றி நடமாட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு காரணமான திமுகவுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவார்கள்”
இவ்வாறு பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.







