சென்னை எழிலகத்தை முற்றுகையிட்டு இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்!

சென்னை எழிலகத்தை முற்றுகையிட்டு இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக அவ்வப்போது போராடி வருகின்றனர். கடந்த 26ம் தேதி மீண்டும் அதே கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை கைது செய்து திருமண மண்டபங்களில் அடைத்து வைத்திருந்து மாலையில் விடுவித்தனர். தொடர்ந்து 2வது நாளாக 27-ம் தேதி, சென்னை எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து, போலீசார் அவர்களை கைது செய்து மாலை விடுவித்தனர்.

இதற்கிடையே, 3வது நாளாக நேற்று சென்னை பிராட்வேயில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சூழலில் போலீசார் அவர்களை கைது செய்தனர். இந்த நிலையில், சென்னை எழிலகம் முன்பு காமராஜர் சாலையில் இன்று 4வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றபோது, போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கும் இடையே சிறிது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர். இருப்பினும், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஆசிரியர்கள் தெரிவித்தனர். போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.