பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை: அமைச்சர் ஐ. பெரியசாமி

பாலியல் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது அரசு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி அளித்துள்ளார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் பசுமைப் போர்வைத் திட்டத்தை தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி…

பாலியல் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது அரசு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி அளித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் பசுமைப் போர்வைத் திட்டத்தை தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் உணவு துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, மழைப்பொழிவை அதிகரிக்க வேண்டும் என்கிற நோக்கில் இத்திட்டம் தொடங்கப்படுவதாக தெரிவித்தார்.

திண்டுக்கல் தனியார் கல்லூரி தாளாளர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படும் புகார் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது அரசு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும் எனவும், விரைவில் அவர் காவல்துறையால் கைது செய்யப்படுவர் எனவும் உறுதி அளித்தார்.

இதனிடையே, பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தலைமறைவாகி உள்ள திண்டுக்கல் தனியார் கல்லூரி தாளாளரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர் சங்கத்தினர் மனு அளித்தனர். பாலியல் சீண்டலுக்கு உதவியாக இருந்த விடுதிக்காப்பாளர் அர்ச்சனா மட்டும் கைது செய்யப்பட்ட நிலையில், தாளாளர் ஜோதி முருகன் கைது செய்யப்படவில்லை எனவும் அவர்கள் புகார் தெரிவித்தனர். காவல்துறை கைது செய்ய காலம் தாழ்த்தினால் தொடர் போராட்டம் நடத்தப்படும் எனவும் மாணவர் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.