தமிழ்நாட்டை போன்று டெல்லியிலும் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் – டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி

ஆளுநருக்கு எதிரான தீர்மானத்தில் மு.க.ஸ்டாலின் முயற்சியை ஆதரிப்பதாக  டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்ய, மத்திய அரசையும், குடியரசுத்…

ஆளுநருக்கு எதிரான தீர்மானத்தில் மு.க.ஸ்டாலின் முயற்சியை ஆதரிப்பதாக  டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்ய, மத்திய அரசையும், குடியரசுத் தலைவரையும் வலியறுத்தி, தமிழ்நாடு அரசின் சார்பில் தனித் தீர்மானம், தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டது.

ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தனித் தீர்மானத்தின் அடிப்படையில், ஒவ்வொரு மாநில சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றிடக் கோரி பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

அந்த கடிதத்தில், இந்தியாவில் மக்களாட்சி இன்று முக்கியமான கட்டத்தில் உள்ளது என்பதையும், நமது நாட்டில் கூட்டாட்சித் தத்துவம் என்பது படிப்படியாக மறைந்து வருவதையும் காண்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுநரின் கடமைகள் குறித்தும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் கடமைகளையும், பொறுப்புகளையும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ள போதிலும், அவைகள் இப்போது மதிக்கப்படுவதோ அல்லது பின்பற்றப்படுவதோ இல்லை என்றும் அதனால் மாநில அரசுகளின் செயல்பாடுகள் பெரிதும் பாதிக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சூழ்நிலையில், அந்தந்த மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் அளிப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயம் செய்யுமாறு மத்திய அரசு மற்றும் குடியரசுத் தலைவரை வலியுறுத்தி மாநிலச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது ஏற்புடையதாக இருக்கும் என்று கருதி, அது தொடர்பாக ஏப்ரல் 10 ஆம் தேதி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தனித் தீர்மானத்தின் சாராம்சத்தையும் தனது கடித்துடன் இணைத்து கடிதம் எழுதினார்.

இந்த கடிதத்திற்கு விளக்கம் அளித்துள்ள டெல்லி முதல்வர்  அரவிந்த் கெஜ்ரிவால் மாநில அரசுகளின் மீதான ஆளுநரின் தலையீடு விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முயற்சியை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது..

“பாஜக அல்லாத மாநில அரசுகளின் அதிகாரங்களை அபகரிக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் மத்திய அரசு  மற்றும் அதன் பிரதிநிதிகளின் நடவடிக்கைகளை வன்மையாக  கண்டிக்கிறோம். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சிகளை நான் ஆதரிக்கிறேன். ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை நாங்கள்  வரவேற்கிறோம்”  என  அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.