“மணிப்பூரை விட இஸ்ரேல் நிலவரத்தை அறியவே பிரதமர் மோடி ஆவலாக உள்ளார்!” – ராகுல் காந்தி விமர்சனம்!

மணிப்பூர் நிலவரத்தை அறிவதை விட இஸ்ரேல் நிலவரத்தை அறியவே பிரதமர் மோடி ஆவலாக இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். மிசோரம்,  தெலங்கானா,  மத்தியப் பிரதேசம்,  ராஜஸ்தான்,  சத்தீஸ்கர் ஆகிய…

மணிப்பூர் நிலவரத்தை அறிவதை விட இஸ்ரேல் நிலவரத்தை அறியவே பிரதமர் மோடி ஆவலாக இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மிசோரம்,  தெலங்கானா,  மத்தியப் பிரதேசம்,  ராஜஸ்தான்,  சத்தீஸ்கர் ஆகிய 5 மாநில சட்டமன்றங்களின் பதவிக் காலம் விரைவில் முடிய உள்ள நிலையில், அக்டோபர் 9ம் தேதி 5 மாநில தேர்தல் தேதிகளையும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் அறிவித்தார்.

இதன்படி 40 தொகுதிகளை கொண்ட மிசோரத்தில் நவம்பர் 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் ராகுல் காந்தி இன்று மிசோரமில் பாத யாத்திரை மேற்கொண்டார்.  ஜஸ்வால் சென்ற அவரை ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் வரவேற்றனர்.  அங்குள்ள சன்மாரி சந்திப்பில் இருந்து அவர் பாத யாத்திரையை தொடங்கினார்.  பேரணிக்கு பிறகு ஆளுநர் மாளிகை அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார்.

அப்போது காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேசியதாவது:

சிறு மற்றும் குறு வணிகங்களை அழிக்க வடிவமைக்கப்பட்டது தான் ஜிஎஸ்டி.  இது நம் நாட்டு விவசாயிகளை பலவீனப்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது.  பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் என்ன நடந்தது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.  இது நமது நாட்டு பிரதமரின் அபத்தமான யோசனை.  பொருளாதாரம் இன்னும் மீளவில்லை.

இந்தியாவின் பொருளாதாரத்தை வளர்ப்பதற்கான பிரதமரின் உத்தியை நீங்கள் புரிந்து கொள்ள விரும்பினால்,  அதை ஒரே வார்த்தையில் சுருக்கமாகக் கூறலாம் ‘அதானி’. எல்லாமே ஒரு தொழிலதிபருக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அது தான் தேசத்தின் நிலை.  மணிப்பூர் தற்போது ஒரு மாநிலமாக இல்லை.  இரண்டு பகுதிகளாக பிரிந்து நிற்கின்றன.  இவ்வளவு நடந்தும், மணிப்பூர் செல்ல வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தோன்றவே இல்லை.  மணிப்பூரில் என்ன நடக்கிறது என அறிவதை விட, இஸ்ரேலில் என்ன நடக்கிறது என அறிவதில் தான் பிரதமர் மோடி ஆவலாக உள்ளார்.

இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.