நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 28 ஆம் தேதி தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடரான இது ஏப். 2-ஆம் தேதி வரை இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது. அதன் படி முதல் கட்ட அமர்வு பிப். 13 வரையும், இரண்டாம் கட்ட அமர்வு மாா்ச் 9 முதல் ஏப். 2 வரையும் நடைபெறுகிறது.
முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றினார். தொடர்ந்து கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
இந்த சூழலில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதமானது நேற்று மக்களவையில் நடைபெற்றது. அப்போது பேசிய மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி டோக்லாம் விவகாரம் குறித்து பேசினார். இதற்கு பாஜக எம்.பி. க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் தொடர்ந்து ராகுல் காந்தி டோக்லாம் விவகாரம் குறித்து பேசவே அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்ந்து 5 ஆம் நாளான இன்று மக்களவை தொடங்கிய நிலையில் இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்த விவாதிக்ககோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மக்களவை 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா சபாநாயகர் தனது அறையில் என்.டி.ஏ மற்றும் இந்தியா கூட்டணி எம்.பி-க்கள் குழு தலைவர்களை நேரில் அழைத்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வை சுமூகமாக நடத்துவது குறித்தும், எதிர்க்கட்சி எம்.பி-க்கள் கோரும் விவாதத்தை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.







