கடல் வாழ் உயிரிகளை காவு வாங்கும் பிளாஸ்டிக் கழிவுகள்

உலகம் முழுவதும்  கடலோரப் பகுதிகள் பிளாஸ்டிக் கழிவுகளால் குப்பைமேடாக மாறி வருகின்றன.  கடற்கரைகள் மட்டுமின்றி ஆறுகள், ஏரிகள் குளங்களிலும் பிளாஸ்டிக் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றது.   பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளுக்கு எதிராக விழிப்புடன்…

உலகம் முழுவதும்  கடலோரப் பகுதிகள் பிளாஸ்டிக் கழிவுகளால் குப்பைமேடாக மாறி வருகின்றன.  கடற்கரைகள் மட்டுமின்றி ஆறுகள், ஏரிகள் குளங்களிலும் பிளாஸ்டிக் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றது.   பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளுக்கு எதிராக விழிப்புடன் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது மனித குலம். 

நிமிடத்திற்கு 4 லாரி கழிவுகள்
பிளாஸ்டிக் சுற்றுப்பட்டுள்ள பறவை

75 கடல்பகுதிகள் – 75 நாள் – 7,500 கி.மீ தூரம் கடற்பரப்பை தூய்மைப் படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.   பிளாஸ்டிக் பயன்பாடு மனிதர்களுக்கு எந்த அளவுக்கு தீமையாக இருக்கிறதோ, அதைவிட மோசமாக வனவிலங்குகளையும் கடல்வாழ் உயிரிகளையும் பாதிக்கிறது. உலக அளவில் 40 சதவிகித கடல் பரப்புகளை பிளாஸ்டிக் கழிவுகள் ஆக்கிரமித்துள்ளன. இதே விழிப்புணர்வு அற்ற நிலை தொடர்ந்து, 2050 ஆம் ஆண்டு வாக்கில், கடலில் இருக்கும் மீன்களை விட, அதில் இருக்கும் பிளாஸ்டிக்கின் எடை அதிகமாக இருக்கும் என்று புள்ளிவிவரம் ஒன்று அச்சுறுத்துகிறது. அதாவது

நிமிடத்திற்கு நான்கு லாரி பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கொட்டப்படும் நிலை உருவாகிவிடும்

என்று ஆய்வறிக்கை ஒன்று சொல்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை கடலோரப் பகுதிகளில் ஆண்டுக்கு 50 ஆயிரம் டன் முதல் 25 லட்சம் டன் வரை பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதாக ஒரு கணக்கீடு தெரிவிக்கிறது.

கடல் உயிரிகளை அழிக்கும் பிளாஸ்டிக்

புறநகர் பகுதிகளில் தெருக்களில் அவிழ்த்து விடப்படும் கால்நடைகள் பிளாஸ்டிக் கழிவுகள், போஸ்டர்கள் போன்றவற்றை உண்ணுவதைக் காண்கிறோம். அது போலவே, கடலில் குவியும் கழிவுகளை பறவைகளும் சாப்பிட்டு அழிகின்றன. 90 சதவிகித கடல் பறவைகள் பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணுவதாக சொல்லும் வல்லுநர்கள்,

2050ல் பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணாத பறவைகளே இருக்க முடியாது என்ற நிலைக்கு மாறிவிடும் என்கிறார்கள்.

அல்பட்ராஸ் போன்ற பெரிய பறவைகள் பிளாஸ்டிக் கழிவுகளை அதிகம் உண்ணுகின்றன. பசுபிக் கடலில் இருக்கும் பராக்கீட் (Parakeet auklet) அக்லட் என்ற சிறிய பறவையும் கூட அதிக அளவில் பிளாஸ்டிக்கை உட்கொள்கின்றன.

பிளாஸ்டிக் – அழியும் திமிங்கலங்கள் 

பிளாஸ்டிக் குப்பைகளால் கடல் ஆமைகளும் அதிகம் பாதிக்கப்படுகின்றன. கடல் பறவைகள், மீன்களைப் போலவே பிளாஸ்டிக்கை சாப்பிட்டுவிட்டு செரிமானக் கோளறுகளால் கடல் ஆமைகள் பலியாவது தொடர்கிறது. இறந்த பறவைகளின் வயிறு முழுவதும், குவியலாக பிளாஸ்டிக் இருப்பது பறவைகள் நல ஆர்வலர்களை அதிரவைத்தது. இதுவே கடந்த 40 ஆண்டுகளில் பிளாஸ்டிக் மாசு எந்த அளவுக்கு உலகையும், கடலையும் ஆக்கிரமித்துள்ளது என்பதை வெட்டவெளிச்சமாக்கி உள்ளது.

வடக்கு பசுபிக் கடலில் மட்டும் 12 ஆயிரம் முதல் 24 ஆயிரம் டன் வரையிலான பிளாஸ்டிக்கை மீன்கள் உட்கொள்கின்றன.

இறந்த திமிங்கலங்கள் வயிறு முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளால் நிரம்பி வழிவதைக் கண்டு கடல் வாழ உயிரின ஆர்வலர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.

பிளாஸ்டிக்கினால் கடலில் ஏற்படும் பாதிப்புகள் 

பிளாஸ்டிக் பொருட்கள் 20 முதல் 500 ஆண்டுகள் வரை அழியாதவை. சிறு சிறு துகள்களாக கடலில் கலக்கும் பிளாஸ்டிக்கை கடல் வாழ் உயிரிகள் உட்கொண்டு அழிகின்றன. செரிமானப் பிரச்னை, உடலில் பிளாஸ்டிக் சுற்றிக் கொள்ளுதல் போன்றவற்றால் உயிரிழக்கின்றன. இது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலியாவைச் சேர்ந்து கடலியல் ஆராய்ச்சியாளர் கிறிஸ் வில்காக்ஸ்,

உலக அளவில் பிளாஸ்டிக் உற்பத்தி என்பது, பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இரண்டு மடங்காகி வருவதாக வேதனை

தெரிவித்துள்ளார். இதன் விளைவுகள் மிக பயங்கரமாக மாறிவருவதாக அவர் குறிப்பிட்டார். பிளாஸ்டிக் பயன்பாடு நாளுக்கு நாள் பன்மடங்கு அதிகரித்து வருவதும், அதன் காரணமாக அவற்றின் பாதிப்பு உச்சம் தொடுவதும் அச்சமூட்டுகிறது.

அனைவரின் கடமை 

எண்ணெய் கழிவுகளில் சிக்கிய பறவை

சென்னையைச் சேரந்த விஞ்ஞானி ஆர் வெங்கடேசன் , அறிவியல் பலகை நிகழ்ச்சியில் பங்கேற்று பிளாஸ்டிக் மாசுபாடு தொடர்பாக விளக்கியபோது, கடற்கரைப் பகுதிகளில்,

குவிந்து வரும் குப்பைகள் குறைவதற்கு, பிளாஸ்டிக் மறுசுழற்சித் தொட்டிகளை அமைத்தல், பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் கூட்டு முயற்சியில் இறங்குதல்

போன்றவற்றை இவற்றுக்கான தீர்வாக முன்வைக்கிறார். அதே நிகழ்ச்சியில் பேசிய அறிவியலாளர் த.வி. வெங்கடேஸ்வரன், கடற்கரைக் கழிவுகள் மக்களையே அதிகம் பாதிக்கும். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 3வது சனிக்கிழமை கடற்கரை சுத்தம் செய்யும் நாள் கொண்டாடப்படுகிறது.  இதில் அனைவரும் பங்கேற்று பூமியைக் காக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். மனித குருதியிலும் பிளாஸ்டிக் நுண்துகள் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அங்கிங்கெணாது ஊடுருவும் பிளாஸ்டிக் தீமையின் தீவிரத்தை இது உணர்த்துவதாக இருக்கிறது.

பிளாஸ்டிக் கழிவு – தீர்வு என்ன?

1. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை குறைத்தல் – பிளாஸ்டிக் கழிவுகள் குறித்த கவலை உள்ளவராக நீங்கள் இருந்தால், உங்களில் இருந்தே மாற்றம் தொடங்கட்டும். பிளாஸ்டிக் பேக், தண்ணீர் பாட்டில், ஸ்டிரா, கப் உள்ளிட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கைத் தவிர்த்தல். அவற்றை வாங்குவதைக் கைவிடுதல் மிக அவசியமானது.

2. பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் அதன் மாசுபாடுக்கு எதிராக சட்டம் இயற்றுதல், அதற்கு ஆதரவு அளித்தல்

3. மறு சுழற்சிக்கு பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக்குகளை , மறு சுழற்சி செய்ய உதவுதல். தற்போது சுமார் 9 விழுக்காடு பிளாஸ்டிக்குகள் மட்டுமே, உலக அளவில் மறு சுழற்சி செய்யப்பட்டு வருகின்றன.

4. பிளாஸ்டிக் பயன்படுத்த மாட்டேன் என்று சுய உறுதி மொழி எடுத்துக்கொண்டு அதனைக் கட்டாயமாகக் கடைபிடித்தல்

5. கடற்கரை மற்றும் ஆறு குளங்களை தூய்மை செய்தல் – இந்த பூவுலகின் மீது உண்மையான அக்கறை உள்ளவராக நீங்கள் இருந்தால், எந்த இடத்திலும் பிளாஸ்டிக் பொருட்களை தேவையின்றி பயன்படுத்தாதீர்கள். அதன் கழிவுகளை போட்டுவிடாதீர்கள். அத்துடன் கடற்கரைகளிலும், ஆறு மற்றும் ஏரி குளங்களில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற தன்னார்வலர்களாக பங்கேற்று உதவுங்கள்.

6. பிளாஸ்டிக்கினால் ஆன சிறு மணி போன்ற பொருட்களைத் தவிர்த்தல்.

7. பிளாஸ்டிக் மாசுபாடு தொடர்பாக தானாக முன்வந்து பரப்புரை செய்தல். விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அத்துடன் அது தொடர்பான பணிகளில் ஈடுபடும் அமைப்புகளுடன் இணைந்து தன்னார்வலர்களாக செயல்படுதல்.

8. கடலில் கொட்டப்படும் கழிவுகள் தொடர்பான சட்டங்கள் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும்.

அன்பை பன்மடங்கு கொடுப்பவர் தான் அன்னை. அந்த வகையில் கடலன்னையும் நாம் எதைக்கொடுத்தாலும் அதை அப்படியே திருப்பிக் கொடுக்கும் திறன் கொண்டது. ஆகவே அதற்கு மாசுபாட்டை ஏற்படுத்தால், கடலன்னையின் நலம் காத்தால், அது நிச்சயம் மனித குலத்தின் நலனைக் காக்கும். இன்றேல் நம் சந்ததிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.

-ஜெயகார்த்தி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.