சென்னை மாமன்ற தீர்மானத்தால் தப்பிய திமுக கவுன்சிலர் பதவி

சென்னை மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தால் திமுக கவுன்சிலர் ஒருவரின் பதவி தப்பியது.  இந்தியாவில் உள்ள பழமையான மாநகராட்சிகளில் சென்னை மாநகராட்சியும் ஒன்று. 1919ம் ஆண்டு சென்னை சிட்டி முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டம் கொண்டு…

சென்னை மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தால் திமுக கவுன்சிலர் ஒருவரின் பதவி தப்பியது. 

இந்தியாவில் உள்ள பழமையான மாநகராட்சிகளில் சென்னை மாநகராட்சியும் ஒன்று. 1919ம் ஆண்டு சென்னை சிட்டி முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதில் விதி 53-1(i) – படி சென்னை மாநகராட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் கவுன்சிலர் தான் பதவியேற்ற காலத்தில் இருந்தோ அல்லது இறுதியாக பங்கேற்ற மாமன்ற கூட்டத்திற்கு பிறகு தொடர்ந்து மூன்று மாமன்ற கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றால் மன்ற உறுப்பினராக, அதாவது கவுன்சிலராக இருந்து தகுதி இழப்பதாக உள்ளது.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சியின் மண்டலத்தின் 118வது உறுப்பினராக உள்ள மல்லிகா தொடர்ச்சியாக மூன்று மாமன்ற கூட்டத்திற்கு வரவில்லை. அமெரிக்காவில் உள்ள மல்லிகாவின் மகளுக்கு எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தினனால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மகளின் மருத்துவ சிகிச்சையின் போது உடன் இருப்பதற்காக மல்லிகா அமெரிக்கா சென்றுள்ளார். இதன் காரணமாக அவர் மூன்று மாதமாக நடைபெறும் மாதாந்திர மாமன்ற கூட்டத்திற்கு வரவில்லை எனவும், இந்த நேரத்திலும் தனது வார்டு மக்களுடன் வாட்ஸ் ஆப் உள்ளிட்டவை மூலம் தொடர்பு கொண்டு மக்களுக்கு வேண்டிய பணிகளை செய்து வந்ததாகவும் விளக்கமளித்துள்ளார்.

சென்னை சிட்டி முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டம் 1919 விதி 53-IV படி மாமன்ற கூட்டத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் தகுதி இழந்த உறுப்பினர் மீண்டும் கவுன்சிலராக பணியாற்ற விரும்பி தீர்மானமாக நிறைவேற்றினால் தகுதி இழப்பு அடைந்த உறுப்பினர் மீண்டும் பணியை தொடரலாம்.

இதன் அடிப்படையாக கொண்டு, கவுன்சிலர் மல்லிகாவின் விளக்கத்தை ஏற்று மீண்டும் மாமன்ற உறுப்பினராக அதாவது கவுன்சிலராக தொடர்ந்து பணியாற்ற வாய்ப்பு வழங்கும் சிறப்பு தீர்மானத்தை இன்றைய மாமன்ற கூட்டத்தில் ஆளுங்கட்சி தலைவர் திமுக மாமன்ற உறுப்பினர் ராமலிங்கம் கொண்டு வந்தார். இதற்கு பெருவாரியான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால் தீர்மானம் நிறைவேறியது.

பாரம்பரியமிக்க சென்னை மாநகராட்சியின் வரலாற்றில் இதற்கு முன்னதாக 1998 ஆம் ஆண்டு 113 வது வார்டு உறுப்பினராக இருந்த கவுன்சிலரும் தொடர்ந்து மூன்று முறை மாமன்ற கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதே போல் அப்போதும் தீர்மானம் நிறைவேற்ற பட்டு அவருக்கு தொடர்ந்து கவுன்சிலராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது என சென்னை மாமன்ற செயலாளர் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.