அமலுக்கு வந்தது பிளாஸ்டிக் பொருட்களுக்கானத் தடை

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய, மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கானத் தடை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய, மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு…

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய, மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கானத் தடை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய, மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக தடை விதிக்க முடிவு செய்துள்ள மத்திய அரசு, அதனை படிப்படியாக அமல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய, மறு சுழற்சி செய்ய முடியாத 75 மைக்ரோனுக்குக் குறைவான தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை கடந்த ஆண்டு அக்டோபர் முதல் அமலுக்கு வந்தது.

இதன் தொடர்ச்சியாக, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய, மறு சுழற்சி செய்ய முடியாத 100 மைக்ரோனுக்குக் குறைவான தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கானத் தடை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதற்கான அறிவிப்பை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, பிளாஸ்டிக் பட்ஸ்(காது குடைப்பான்), பலூன், மிட்டாய், ஐஸ்கிரீம் போன்றவற்றுக்குப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் ஸ்டிக், பிளாஸ்டிக் கொடிகள், தெர்மகோல், பிளாஸ்டிக் தட்டுகள், டம்ளர்கள், ஸ்பூன்கள், கத்திகள், ஸ்ட்ரா, ஸ்வீட் பாக்ஸ் – சிகரெட் பாக்ஸ் போன்றவற்றில் சுற்றப்படும் பிளாஸ்டிக் ஷீட்ஸ் போன்ற பல்வேறு பொருட்களுக்கானத் தடை இன்று முதல் அலுக்கு வந்துள்ளது.

இந்த பொருட்களை உற்பத்தி செய்யவும், இறக்குமதி செய்யவும், பதுக்கி வைக்கவும், விநியோகம் செய்யவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படுவதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

இதனை கண்காணிக்க டெல்லியில் உள்ள மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமையகத்தில், தனி கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் இத்தகைய பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்று நாட்டு மக்களை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியுள்ளதை ஒட்டி, சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

இதனை கருத்தில் கொண்டு மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் இதற்கான நடவடிக்கைகளை படிப்படியாக மேற்கொண்டு வருகிறது.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய, மறு சுழற்சி செய்ய முடியாத 120 மைக்ரோன் தடிமனுக்குக் குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கானத் தடை டிசம்பர் 31ம் தேதி முதல் அமலுக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.