சொந்த வீட்டிற்கு வருவது போல் சாவகாசமாக காரில் வந்து வீட்டில் உள்ள நகை பணங்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பழைய ஹவுசிங் போர்டு பகுதியில் வசிப்பவர் அண்ணாமலை சாந்தி தம்பதியினர்.அண்ணாமலை அரசு போக்குவரத்து கழகத்தில் பேருந்து ஓட்டுனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கணவன் மனைவி இருவரும் தனியாக வசித்து வந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஓமலூரில் உள்ள மகள் நதியா வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அந்நிலையில் வீட்டின் கதவில் போடப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்திருப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் அண்ணாமலைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே வீட்டிற்கு வந்த அண்ணாமலை வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 4 சவரன் நகை,வெள்ளி கொலுசு மற்றும் 25 ஆயிரம் ரொக்கம், எல்.இ.டி. டிவி, உள்ளிட்ட இரண்டு இலட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் காணமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்த அண்ணாமலை ஆத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை பதிவு செய்தனர்.
அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது ,அதிகாலை நேரத்தில் கார் ஒன்று, அண்ணாமலை வீட்டின் வாசலில் நிற்பதும், அந்த காரில் இருந்து, இறங்கும் நபர்கள், அண்ணாமலையின் வீட்டின் பூட்டை உடைத்து, உள்ளே சென்று 40 நிமிடங்களுக்கு பிறகு, சாவகாசமாக வீட்டில் உள்ள பொருட்களை காரில் ஏற்றி செல்லும் காட்சிகள் தெளிவாக பதிவாகி இருந்தது.
சிசிடிவி காட்சிகளில் பதிவான கார் எண், மற்றும் மர்ம நபர்கள் குறித்து சுற்றுவட்டார காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு சிசிடிவி காட்சிகளை கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர். வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட நபர்கள் அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் வராதபடி, சொந்த வீட்டிற்கு வருவது போன்றும் உறவினர்கள் வீட்டிற்கு வருவது போன்றும் பாவனை செய்து, காரில் வந்து கொள்ளையடித்து சென்ற இச்சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அ.மாரித்தங்கம்







