மோசடி நிதி நிறுவனங்களை கண்டறிவது எப்படி? மோசடியில் சிக்காமல் தப்பிப்பது
எப்படி? இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
“ஒருத்தரை ஏமாற்ற வேண்டும் என்றால் அவனிடம் கருணையை எதிர்பார்க்க கூடாது,
அவனது ஆசையை தூண்டனும்” என்ற “சதுரங்க வேட்டை” திரைப்பட வசனம் எந்த
காலத்திற்கும் பொருந்தும். இந்த திரைப்பட வசன பார்த்தும் கேட்டும் கூட ஏமாறுபவர்களும், ஏமாற்றுபவர்களும் உருவாகி கொண்டு தான் இருக்கின்றனர்.
மோசடி நிறுவனங்களிடம் பொதுமக்கள் எவ்வாறு ஏமாறாமல் இருப்பது என்று ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி பாலசுப்பிரமணியனுடன் நமது நியூஸ் 7 தமிழுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அதில் 1998-ம் ஆண்டு கலைமகள் சபா நிதி நிறுவனம் மோசடி, 2011-ம் ஆண்டு திருப்பூர் பாசி போரக்ஸ் நிதி நிறுவன மோசடி, 2012-ஆம் ஆண்டு ஈமு கோழி வளர்ப்பு நிறுவனம் மோசடி, 2018-ஆம் ஆண்டு மதுரை பாரிவர் டைரீஸ் அண்டு அலைடு நிறுவனம் நிதி மோசடி, 2019- ஆம் ஆண்டு கோவை, ராமநாதபுரத்தில் இயங்கி வந்த கிரீன் கிரெஸ்ட் நிதி நிறுவன மோசடி, 2020-ஆம் ஆண்டு கேஎப்ஜே தங்க நகை சேமிப்பு திட்ட மோசடி, 2021-ஆம் ஆண்டு ஹெலிகாப்டர்கள் சகோதரர்கள் நிதி நிறுவன மோசடி, 2022-ஆம் ஆண்டு ஆருத்ரா கோல் நிதி நிறுவன மோசடி, 2022-ம் ஆண்டு ஐஎப்எஸ் நிதி நிறுவன மோசடி என முடிவில்லாமல் பல ஆண்டுகளாக முதலீட்டு மோசடிகள் சென்று கொண்டிருக்கிறது.
பல கோடிகள் மோசடி நடந்து என பல வகையிலான மோசடி சம்பவங்களை பற்றி செய்திகளை ஊடகங்கள், பத்திரிகைகள், தற்போது சமூகவலைதளங்களில் வெளிவந்தாலும் கூட தொடர்ந்து பொதுமக்கள் ஏமாந்து கொண்டிருப்பது வேதனை தான் என்று தெரிவித்தார்.
12.5 சதவீதம் அதற்கு குறைவாகத் தான் நிதி நிறுவனங்கள் வட்டி கொடுக்க வேண்டும்
என்பது ரிசர்வ் வங்கியின் விதிமுறை. ஆனால் அதனை கூட தெரிந்து கொள்ளலாமல்
போராசையால் மோசடி நிதி நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்து பலர் ஏமாறுவது
தொடர் கதையாகி வருகிறது. தற்போது சமூக வலை தள காலத்தில் இணையத்தில் அனைத்தும் தெரிந்து கொள்வதற்கான வசதிகள் இருந்தும் கூட மோசடி நிதி நிறுவனங்கள் குறித்து ஏமாறுபவர்கள் அதனை தேடி பார்ப்பது இல்லை என்பதே கொடுமை என்று கூறினார்.

நிதி நிறுவன மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை அசோக் நகரில் செயல்பட்டு
வரும் தமிழ்நாடு பொருளாதார குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்தில் நேரில் சென்று
புகார் கொடுக்கலாம். தமிழ்நாட்டின் 20 மாவட்டங்களிலும் இதற்கான அலுவலகங்கள்
செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு பொருளாதார குற்றப்பிரிவுக்கு என்று (www.tneow.gov.in) தனியாக இணைய தளம் செயல்பட்டு வருகிறது.
இந்த இணைய தளத்திலேயே பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை அதிகாரிகளின் இமெயில் முகவரிகளும் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்களௌ
புகார்களை அனுப்பலாம் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
மோசடியில் ஈடுபட்டோர் மீது தமிழ்நாடு டெபாசிட்டர்களின் நலன் பாதுகாப்பு சட்டம் 1997- ன் படி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தால் 10 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் என்றாலும் கூட பணத்தை இழந்தவர்களுக்கு விரைவாக அந்த பணம் திரும்ப கிடைக்கும் என்பதனை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாராலேயே உறுதிப்படுத்த முடியாது.
ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட அங்கீகாரம் பெற்ற வங்கிகள் மற்றும் நிதி
நிறுவனங்களில் தங்களின் கடின உழைப்பால் பெறப்பட்ட பணத்தினை முதலீடு செய்யுமாறு பொதுமக்களுக்கு தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளார். எப்படியாக இருந்தாலும் “ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள்
இருப்பார்கள்” என்பதில் மாற்று கருத்து இல்லை.







