சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் பாமக தலைவர் அன்புமணி சந்தித்தார். இந்த சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் ஜெயக்குமார், வழக்கறிஞர் பாலு, திலகபாமா ஆகியோர் உடன் இருந்தனர்.
அப்போது சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து இரு தலைவர்களும் இறுதி செய்தனர். இதையடுத்து சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக – பாமக இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்பின், இருவரும் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “சட்டசபை தேர்தலில் அதிமுக – பாஜக ஏற்கனவே கூட்டணி அமைத்துள்ளது. தற்போது பாமக கூட்டணியில் இணைந்துள்ளது. விரைவில் மேலும் சில கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணைவார்கள். எங்கள் கூட்டணி இயற்கையான கூட்டணி.
அதிமுக தொண்டர்கள் விரும்பியபடி கூட்டணி அமைத்துள்ளோம். இது வெற்றி கூட்டணி. மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற லட்சியத்தின் அடிப்படையில், வலிமையான தமிழகத்தை உருவாக்க, மக்களுக்கான திட்டங்களை கொடுக்க, 234 தொகுதிகளில் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறுவோம். தேனீக்கள் போல செயல்பட்டு மிகப்பெரிய வெற்றி பெறுவோம். தொகுதி எண்ணிக்கையை முடிவு செய்துவிட்டோம். மற்றதை பின்னர் அறிவிப்போம் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அன்புமணி, “பாமக தொண்டர்கள் எதிர்பார்த்த கூட்டணி அமைந்துள்ளது. மக்கள் விரோத திமுக கூட்டணியை அகற்றுவதற்காக அதிமுகவுடன் கைகோர்த்துள்ளோம். வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெருவாரியான தொகுதிகளில் வென்று ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளார்.







