அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, நவம்பர் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை நிராகரித்ததுடன், நீதிமன்ற காவலை நீட்டித்துக் கொண்டே வந்தது. இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், மருத்துவ காரணங்களை காட்டியும், சாட்சிகளை கலைக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.
இதன் காரணமாக ஜாமீன் வழங்கக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடைபெற்றது. இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நவம்பர் 20-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது.







