2025ம் ஆண்டு ஏழைகளுக்கு ஏக்கம் தரும் ஒன்றாக தங்கம் மாறிப்போய்விட்டது. அந்த அளவுக்கு எட்டிப்பிடிக்க முடியாத விலை உயர்வை சந்தித்துள்ளது தங்கம். தங்கத்துக்கு போட்டியாக வெள்ளியும் விலையேற்றத்தில் விண்ணை முட்டியுள்ளது. ஒவ்வொரு நாளும் விலை உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டு வருகிறது.
தங்கத்தின் விலை நேற்று முன்தினம் 2 முறை மாற்றம் கண்டது. அதன்படி ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை காலை ரூ.60 குறைந்த நிலையில், மாலை ரூ.80 உயர்ந்து, ரூ.12,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒரு சவரன் தங்கம் ரூ.640 உயர்ந்து, ரூ.1,00,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ரூ.257-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,000 உயர்ந்து, ரூ.2,57,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
விடுமுறை நாளானாதால் நேற்று மாற்றமின்றி இருந்த தங்கம் விலையானது வாரத்தின் முதல் வேலை நாளான இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன் படி இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,680-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,01,440-க்கு விற்பனையாகிறது.
தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ஒரு கிராம் ரூ.265-க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.







