கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் பிரச்சார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கு சிபிஐ அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் கரூர் வழக்கு தொடர்பாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் 2 முறை தவெக தலைவர் விஜய் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரிக்கப்பட்டார். தொடர்ந்து மூன்றாவது முறையாக நேற்றும் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் சென்னை புறப்பட்டார்.
இந்த சூழலில் தவெக தலைவர் விஜய் தரப்பில் தமிழ்நாட்டின் விசாரணைக்கு ஆஜராவதை பரிசீலனை செய்ய வேண்டும் என சிபிஐ-யிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நேற்று , சிபிஐ அதிகாரிகளிடம் விஜய் தரப்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது :
கரூர் விவகாரத்தில் சிபிஐ நடத்திய மூன்று விசாரணையிலும் சட்டத்திற்குப்பட்டு தான் முழு ஒத்துழைப்பை வழங்கியுள்ளேன். தேர்தல் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், வேட்பாளர்கள் தேர்வு, பரப்புரை என பல்வேறு நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளதால், விசாரணைக்காக டெல்லி வந்து செல்வது சிரமம். எனவே தமிழ்நாட்டின் விசாரணைக்கு ஆஜராவதை அனுமதிக்க வேண்டும் என்றும்
இவ்வாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மூன்றாம் கட்ட விசாரணைக்கு முன்னரே சிபிஐ விசாரணையை சென்னையில் நடத்தப்பட வேண்டும் என்ற தவெக தலைவர் விஜயின் கோரிக்கையை சிபிஐ நிராகரித்தது என்பது குறிப்படத்தக்கது.







