மதுரை சித்திரை திருவிழா – வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!

அழகர் தங்க குதிரையில் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 19ம் தேதி தொடங்கியது. விழா நாட்களில் மீனாட்சி அம்மனும், பிரியாவிடை அம்மனுடன் சுந்தரேசுவரரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மதுரை மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதனை தொடர்ந்து ஏப்ரல் 28-ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவமும் ஏப்ரல் 29-ஆம் தேதி தோரோட்டமும் நடைபெற்றது.

இந்த நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம், லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இன்று அதிகாலையில் கோலாகலமாக நடைபெற்றது. தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலில் இருந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் புறப்பட்ட அழகர், அதிகாலை பச்சை பட்டுடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார். அப்போது கூடியிருந்த பக்தர்கள் “கோவிந்தா” முழக்கத்துடன் தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்றனர்.

வைகையில் எழுந்தருளிய கள்ளழகரை வெள்ளிக் குதிரை வாகனத்தில் வீரராகவப் பெருமாள் வரவேற்றார். அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை காண வந்த பக்தர்களால் மதுரையே விழாக்கோலம் பூண்டது. இதைத் தொடர்ந்து இன்று பிற்பகல் 12 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறுகிறது. மேலும், இரவு 9 மணிக்கு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலில் கள்ளழகர் எழுந்தருளுகிறார்..

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.