நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஈஸ்வரமூர்த்தி பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவர் பாட்டாளி மக்கள் கட்சியில் நாமகிரிப்பேட்டை பகுதியின் ஒன்றிய குழு தலைவர் மற்றும் ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவர் ஈஸ்வரமூர்த்தி பாளையம் அருகே கோலியஸ் கிழங்கு தொழிற்சாலையை இயக்கி வருகிறார்.
இந்த தொழிற்சாலையில் கோலியஸ் கிழங்கு பவுடர் தயாரிக்கப்படுகிறது. இந்த பவுடர் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள தலைமை ஆலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பெங்களூரில் உள்ள தலைமை கோலியஸ் தொழிற்சாலையில் வருமானவரித்துறையினர் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த தொழிற்சாலைக்கு தொடர்புடைய நிறுவனங்களிலும் கர்நாடகாவை சேர்ந்த வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, ஈஸ்வரமூர்த்தி பாளையத்தில் பெரியசாமிக்கு சொந்தமான கோலியஸ் கிழங்கு தொழிற்சாலையிலும் 5-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் நேற்று காலையில் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை இரவு வரை நடைபெற்றது. தற்போது மீண்டும் 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.







