46வது சென்னை புத்தகக் காட்சி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னையில் நடைபெறும் 46வது புத்தகக் காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை ஓய்எம்சிஏ மைதானத்தில் இன்று முதல் நடைபெற இருக்கும் புத்தகக் கண்காட்சியானது, வரும் ஜனவரி 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த…

சென்னையில் நடைபெறும் 46வது புத்தகக் காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை ஓய்எம்சிஏ மைதானத்தில் இன்று முதல் நடைபெற இருக்கும் புத்தகக் கண்காட்சியானது, வரும் ஜனவரி 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சிக்காக 1000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த புத்தகக் கண்காட்சியானது காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறவுள்ளது.

இன்று நடைபெறும் துவக்க விழா நிகழ்ச்சியில் தேவி பாரதி, சந்திர தங்கராஜ், தேவ தேவன் சி.மோகன், பிலையன், பா.ரா சுப்பிரமணியன் ஆகிய 6 பேருக்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகளையும், தலா ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் வழங்கப்படவுள்ளது. மேலும் 9 பேருக்கு பாப்பா சி சார்பில் விருதுகளும் வழங்கப்பட உள்ளது.

46வது சென்னை புத்தகக் கண்காட்சியில், முதன்முறையாக திருநங்கையர் நடத்தும் பதிப்பகத்திற்கு அரங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இம்முறை சர்வதேச புத்தகக் கண்காட்சி ஜனவரி 16, 17, 18 ஆகிய 3 நாட்கள் நடக்கவுள்ளது. இதில் 40க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 20 முதல் 40 புத்தகங்கள் வைத்திருப்பவர்களுக்கு மினி ராக் சிஸ்டம் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புத்தகங்களை வாங்குபவர்கள் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியில் நுழைவு கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படும் நிலையில், பள்ளிகள் மூலம் வரும் மாணவ மாணவியருக்கு அனுமதி இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 46வது சென்னை புத்தகக் கண்காட்சி துவக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, கண்காட்சியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், அமைச்சர் மனோ தங்கராஜ், துணை மேயர் மகேஷ், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.