டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி மற்றும் பாஜக உறுப்பினர்களிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு இருதரப்பினரும் அவையில் போடப்பட்டிருந்த நாற்காலி மற்றும் மேசைகளை தூக்கி ஒருவரை ஒருவர் வீசி தாக்குதல் நடத்திக் கொண்டனர்
250 மாமன்ற உறுப்பினர்களை கொண்ட டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் இன்று நடைபெற இருந்தது. இதில் மேயர் வேட்பாளருக்கு ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஷெல்லி ஓபராய் மற்றும் பாஜக சார்பில் ரேகா குப்தாவும் முன்மொழியப்பட்டுள்ளனர். அதேபோல துணை மேயர் பதவிக்கு ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் ஜலஜ் குமார் மற்றும் பாஜக சார்பில் கமல் பக்ரியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
வாக்கெடுப்பில் வெற்றி பெறும் வேட்பாளர்களுக்கு லெப்டினண்ட் கவர்னர் வினய் குமார் சக்ஷேனா பதவிப் பிரமாணம் செய்து வைப்பதாக இருந்தது. பதவியேற்பு விழாவை காங்கிரசு புறக்கணித்த நிலையில் ஆம் ஆத்மி மற்றும் பாஜக மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
லெப்டினண்ட் கவர்னர் வினய் குமார் சக்ஷேனாவால் நியமிக்கப்பட்ட சபாநாயகர் சத்யா சர்மா முன்மொழியப்பட்ட உறுப்பினர்களை பதவியேற்க அழைக்காமல் நியமன உறுப்பினர்களை ஆல்டெர்மென்களாக பதவியேற்க அழைத்தார். இதனை ஆத்திரமடைந்த ஆம் ஆத்மி உறுப்பினர்கள் கவர்னருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இதன் பின்னர் ஆம் ஆத்மி மற்றும் பாஜக உறுப்பினர்களிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இருதரப்பினரும் அவையில் போடப்பட்டிருந்த நாற்காலி மற்றும் மேசைகளை தூக்கி ஒருவரை ஒருவர் வீசி தாக்குதல் நடத்திக் கொண்டனர். மேலும் இருதரப்பினரிடையே தள்ளு முள்ளும், அடிதடியும் ஏற்பட்டதால் நிலைமையை சமாளிக்க காவலர்கள் வரவழைக்கப்பட்டனர்.
மேயர் பதவியேற்பு விழாவில் அசாதாரண சூழல் நிலவியதால் தேதி அறிவிக்கப்படாமல் பதவியேற்பு விழா ஒத்தி வைக்கப்டுவதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது “நாம் போராடி பெற்ற ஜனநாயகம் மிக முக்கியமானது. அதனை பாதுகாக்க வேண்டும். 2 கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை பணி செய்ய அனுமதியுங்கள்” என தெரிவித்துள்ளார்.