ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அந்தந்த கட்சி தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பரப்புரை மேற்கொள்ள உள்ள தேதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். திருமகன் ஈவேராவின் மறைவு தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு, பிப்ரவரி 27-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் இபிஎஸ் ஆதரவாளரான கே.எஸ் தென்னரசு போட்டியிடுகிறார். இவர்களை தொடர்ந்து தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா நவநீதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதையடுத்து அந்தந்த கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள், ஈரோடு கிழக்கு தொகுதியில் முற்றுகையிட தொடங்கியுள்ளனர். இதனால், தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்து ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் மிகவும் பரபரப்பாக காட்சியளிக்கிறது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து, அந்தந்த கட்சி தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பரப்புரை மேற்கொள்ள உள்ள தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஈரோடு கிழக்கில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிப்.24-ல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிப்.19 ஆம் தேதி பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதேபோல் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான இபிஎஸ், பிப்.15, 16, 17 மற்றும் 24, 25 தேதிகளில் பரப்புரை மேற்கொள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதேபோல் அதிமுக வேட்பளரை ஆதரித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிப். 19, 20-ம் தேதிகளில் பரப்புரை செய்யவுள்ளார்.
தமிழகத்தின் முக்கிய பிரதான கட்சிகளான திமுக, அதிமுகவை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிப். 13-15 மற்றும் 21-25-ம் ஆகிய தேதிகளில் பரப்புரை செய்ய உள்ளார்.
மேலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆனந்த்தை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், பிப்.19-ஆம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை 6 நாட்கள் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.
- பி. ஜேம்ஸ் லிசா