பிரதமர் மோடி நிகழ்ச்சியில் ஈடுபடுத்தப்பட்ட குழந்தைகள் – தேவநேயன் கண்டனம்!

கோவையில் பிரதமர் மோடியின் பேரணியில், பள்ளி மாணவர்களை பங்கேற்க வைத்த விவகாரத்தில், குழந்தைகள் நல உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக சார்பில் கோவையில் நேற்று (மார்ச் 18) நடைபெற்ற வாகனப் பேரணியில்…

கோவையில் பிரதமர் மோடியின் பேரணியில், பள்ளி மாணவர்களை பங்கேற்க வைத்த விவகாரத்தில், குழந்தைகள் நல உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாஜக சார்பில் கோவையில் நேற்று (மார்ச் 18) நடைபெற்ற வாகனப் பேரணியில் பங்கேற்க பிரதமர் மோடி கர்நாடக மாநிலத்தில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அவருக்கு பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடி வருகையை ஒட்டி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள சாய்பாபா காலனி முதல் ஆர்.எஸ்.புரம் வரை 2.5 கி.மீ. தொலைவிற்கு பிரதமர் மோடி சாலை மார்க்கமாக வாகனத்தில் சென்று பொதுமக்களை சந்தித்து கையசைத்து சென்றார்.

பேரணி வாகனத்தில் பிரதமர் மோடியுடன் தமிழக பாஜக தொண்டர்கள் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் இருந்தனர். ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்த பேரணி, ஆர்.எஸ்.புரத்தில் நிறைவடைந்த பின், அங்கு 1998-ம் ஆண்டு கோவை குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு பிரதமர் மோடிஅஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி பந்தய சாலை பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று தங்கினார்.

பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்க பாஜக சார்பில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. அந்த வகையில், சிறுவர்களுக்கு ராமன், சீதை மற்றும் ஹனுமன் வேடமணிந்து சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்தனர். அவர்கள் அனைவருக்கும் பாஜக சின்னம் பொருந்திய அங்கவஸ்திரம் அணிவிக்கப்பட்டு இருந்தது, சில சிறுவர்கள் மோடியின் முக உருவம் கொண்ட முகமூடிகளையும் கையில் வைத்திருந்துள்ளனர். அதுமட்டுமின்றி, பிரதமர் மோடியை வரவேற்க அரசுப் பள்ளி மாணவர்களும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தேர்தல் தொடர்பான பரப்புரை, விளம்பரங்கள் உள்ளிட்ட எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் சிறுவர்களை பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் எச்சரித்து உள்ளது. இதனை மீறிய பாஜகவிற்கு  பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து குழந்தைகள் நல உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன் அரசு தனது முகநூல் பக்கத்தில், “18.03.2024 கோவையில் பிரதமர் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது. தேர்தல் ஆணையத்தின் ஆணையையும் மீறியுள்ளனர். இது குழந்தைகளின் உரிமைகளுக்கு எதிரானது. மேலும் சட்டப்படி குற்றமாகும். அரசுப் பள்ளி மாணவர்களும் இதில் பங்கேற்ற வைத்துள்ளதும் கண்டிக்கத்தக்கது. குழந்தைகளை பிரச்சாரத்தில் ஈடுபடுத்தும் கட்சிகளின் மீது தேர்தல் ஆணையம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.