“தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்துங்கள்!” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரியான கணக்கெடுப்பினை இணைத்து நடத்திட வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் சமூக நீதியை நிலைநாட்டி,…

தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரியான கணக்கெடுப்பினை இணைத்து நடத்திட வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் சமூக நீதியை நிலைநாட்டி, வளர்ச்சியின் பலன்களை மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்குக் கொண்டு செல்வதற்கும், வலிமையான, அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்குவதற்கும் ஏதுவாக, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன், விரிவானதொரு சாதிவாரிக் கணக்கெடுப்பை இணைத்து நடத்துவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு உடனடியாகத் தொடங்கிட வேண்டுமென்று வலியுறுத்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறாத நிலையில், வரவிருக்கக்கூடிய தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதிவாரியான கணக்கெடுப்பினை இணைத்து நடத்திட வேண்டுமென்று தெரிவித்துள்ள முதல்வர், மாநில அளவில் இதற்கான நல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தாலும், இந்தியாவின் சட்டப்பூர்வ மக்கள்தொகை கணக்கெடுப்பு, முக்கியமான சாதி தொடர்பான தரவு உள்ளீடுகளுடன் மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே, சமூக நீதி, சமத்துவம் போன்றவற்றை நிலைநாட்டிட இயலும் என்றும், சமமான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்திட இயலும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று காங்கிரஸ் கூறி வருகிறது. மேலும் நாட்டில் பிகார் மாநிலம் சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொண்டு தரவுகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.