நாங்கள் ஆரிய ஆதிக்கத்திற்குதான் எதிரியே தவிர ஆன்மீகத்திற்கு எதிரி அல்ல என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கழகத் தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் சென்னை செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்ட “#Wing2Point0 – சமூக வலைத்தளத் தன்னார்வலர்கள் சந்திப்பு”-இல் கலந்துகொண்டார். முன்னதாக, திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் முன்னெடுப்பில் மாணவரணி மற்றும் மருத்துவரணியுடன் இணைந்து நடத்தப்படும் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமது கையெழுத்தையும் பதிவு செய்தார்.
இந்நிகழ்வில் அவர் ஆற்றிய பேசியதாவது:
பா.ஜ.க – அ.தி.மு.க போன்ற வெகுஜன விரோதிகளின் நாம் மோதிக்கொண்டு இருக்கிறோம். பாசிசத்துக்கு எதிராக நேரடியாக மோதிக்கொண்டு இருக்கிறோம். எப்படியாவது மக்களைச் சாதியின் பெயரால் மதங்களின் பெயரால் பிளவுபடுத்தி நாட்டை நாசம் செய்ய நினைக்கும் ஒரு கூட்டத்துக்கு எதிராக நாம் மோதிக்கொண்டு இருக்கிறோம். பா.ஜ.க.வின் பாசிசத்தன்மை ஏதோ நமக்கோ – நம் இயக்கத்துக்கோ – நம்மோட கொள்கைகளுக்கோ – நம்முடைய தமிழ்நாட்டுக்கோ மட்டும் எதிரானது அல்ல! இந்தியாவுக்கே எதிரானது. ஒட்டுமொத்த மனித குலத்துக்கே எதிரானது.
இப்படிப்பட்ட பாசிசவாதிகள் ஒருபக்கம் – இவர்களுடைய பாதம் தாங்கிகளாக இருந்து தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்த அடிமை அ.தி.மு.க மறுபக்கம். கொள்கை என்றால், “கிலோ என்ன விலை?” என்று கேட்கும் கொள்கையற்ற கூட்டம்தான் அ.தி.முக! இனிமேலும், பா.ஜ.க.வுடன் இருந்தால் தமிழ்நாட்டு மக்களால் மொத்தமாகப் புறக்கணிக்கப்படுவோம் என்று பயந்து, “உள்ளே வெளியே” ஆட்டம் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வும் அண்ணா பெயரில் கட்சி நடத்தி அதை பா.ஜ.க.விடம் அடகு வைத்த அ.தி.மு.க.வும் வேறு வேறு அல்ல! நாணயமில்லாத நாணயத்தின் இரு பக்கங்கள்தான் இருவரும்!
பா.ஜ.க.வைப் பொறுத்தவரை, அரசியல் எதிரிகள் மேல் மட்டுமல்ல, ஊடகவியலாளர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள், மானுடப் பற்றுமிக்கவர்கள் என்று எல்லோர் மீதும், அதிகார அத்துமீறல்கள், மிரட்டல்கள், அடக்குமுறை ஏவல்கள் செய்பவர்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட சோஷியல் வைரஸைத்தான் நாம் துணிவோடு எதிர்த்து நிற்கிறோம். மிசா… தடா… பொடா… எல்லாம் பார்த்தாயிற்று. மிரட்டல்… உருட்டல்… இதெல்லாம் நம்மை ஒன்றும் செய்யாதென்பதால்தான், பொய் மூட்டைகளையும் அவதூறுகளையும் கட்டவிழ்க்கிறார்கள்! ஹிட்லருக்காவது ஒரே ஒரு கோயபல்ஸ்தான் இருந்தார். ஆனால், கோயபல்ஸ் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து கட்சி ஆரம்பித்தால் எவ்வாறு இருக்குமோ அப்படித்தான் அந்தக் கூட்டம் இருக்கிறது! போகிறபோக்கில் யார் மீது வேண்டுமானாலும் அவதூறு பரப்பலாம்… என்ன பொய் வேண்டுமானாலும் சொல்லலாம்… எதற்கும் ஆதாரம் வேண்டாம்! பொய் பேசுகிறோமே என்கிற கூச்சம் வேண்டாம்! அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் வாட்ஸ்அப் யுனிவர்சிட்டிதான்.
அதில் என்ன வதந்திகளை வேண்டுமானாலும் பரப்பலாம். அதை நம்புவதற்கு ஆட்டுமந்தைக் கூட்டம் தயாராக இருக்கிறதென அடித்து விடுகிறார்கள்… தம் பிடித்து அவர்கள் ஊதுகிற பொய் பலூனை, உண்மை என்கிற ஊசியை வைத்து எளிதாக நாம உடைத்து விடுகிறோமே என்ற எரிச்சல் அவர்களுக்கு… பொய்களுக்குப் பொய்கள் என்றைக்குமே பதிலாகாது! போலியான பெருமைகள் நமக்குத் தேவையில்லை! உண்மையான உழைப்புக்கு அங்கீகாரம் கிடைத்தால் போதும்! நமது செய்திகள் உண்மையானவையாக இருக்க வேண்டுமே தவிர, பா.ஜ.க.வினரைப் போல போலியாக இருக்கக் கூடாது.
அவர்களுக்கு இப்போது ஒரே வேலைதான்! துர்கா ஸ்டாலின் எந்தக் கோயிலுக்குப் போகிறார் என்று பார்க்கிறார்கள். அந்த போட்டோவை எடுத்துப் போட்டு, ”பாத்தீர்களா, கோயிலுக்குச் செல்கிறார்”- எனப் பரப்புகிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கிற எல்லாக் கோயிலுக்கும்தான் துர்கா செல்கிறார். அது அவரது விருப்பம். அதை நான் தடுக்கவில்லை. நாங்கள் ஆரிய ஆதிக்கத்துக்குத்தான் எதிரிகளே தவிர – ஆன்மீகத்துக்கு எதிரிகள் அல்ல. கோயிலும் – பக்தியும் அவரவர் உரிமை – விருப்பம்! ஏராளமான கோயில் நுழைவுப் போராட்டங்களை நடத்தி வெகு மக்களுடைய வழிபாட்டு உரிமையை வாங்கிக் கொடுத்தது திராவிட இயக்கம்தான். தலைவர் கருணாநிதியின் பராசக்தி வசனம்தான் அவர்களுக்குப் பதில்: ”கோயில் கூடாது என்றல்ல; கோயில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக் கூடாது!”
கோயிலையும் பக்தியையும் பா.ஜ.க. தன்னுடைய அரசியலுக்கு சாதகமாக மாற்ற நினைக்கிறது. ஆன்மீகத்தையும் – அரசியலையும் மிகச்சரியாக பகுத்துப் பார்க்கத் தெரிந்த பகுத்தறிவுவாதிகள்தான் தமிழ்நாட்டு மக்கள். ”இந்த கோயில இடிச்சிட்டாங்க அந்தக் கோயில இடிச்சிட்டாங்க”- என வாட்ஸ்அப்பில் பூகம்பப் படங்களைப் போட்டு வதந்தி பரப்புகிறார்கள். ஆனால், உண்மை என்ன? 1000 கோயில்களுக்குக் குடமுழுக்கு விழா நடத்திய ஆட்சிதான் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி. 5000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக்களை மீட்ட ஆட்சிதான் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி. யார் யாரிடம் இருந்து, எங்கே எங்கே இருந்து இந்தச் சொத்தெல்லாம் மீட்கப்பட்டது என அறநிலையத்துறை புத்தகமாகவே அச்சிட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. இதைச் சொல்வதெல்லாம்தான் அவர்களுக்குப் பிடிக்கவில்லை.
லைட் எரிந்தால் திருடனுக்குத்தான் பிடிக்காது! கோயிலை முறையாகப் பராமரித்தால் மதவெறியைத் தூண்டிக் குளிர்காய நினைக்கும் கும்பலுக்குப் பிடிக்காது. அதனால் உண்மைகளைத் தொடர்ந்து மக்களுக்கு எடுத்துச் சொல்வோம்! நம்முடைய கருத்துகளைத் தமிழைத் தாண்டி இந்தியா முழுவதும் உள்ள மற்ற மொழி பேசும் சகோதர – சகோதரிகளிடம் எடுத்துச் செல்வோம். அப்படி நம்முடைய கருத்துகளை மற்ற மொழிகளில் கொண்டுபோகத்தான் Speaking for India பாட்காஸ்ட் தொடரைத் தொடங்கியிருக்கிறேன். இதுவரைக்கும், 2 எபிசோட் வந்திருக்கிறது – இதை மொத்தம் 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்த்திருக்கிறார்கள். இது எத்தனை மாநாடுகளுக்கு சமம் என்று உங்களுக்கே நன்றாகத் தெரியும்!
இப்படி, நம் கருத்துகள் எல்லாத் தரப்பினரையும் சென்றடைய வேண்டும். இன்ஸ்டாகிராம், யூடியூப் என இளைய தலைமுறையினரை ஈர்க்கக்கூடிய சமூக வலைத்தளங்களில் அதிக கவனம் செலுத்துங்கள். இந்த சந்திப்பை ஏற்பாடு செய்த ஐ.டி. விங் செயலாளர் டி.ஆர்.பி. ராஜாவுக்கும், அவருக்குத் துணையாக இருக்கும் மற்றவர்களுக்கும் முதலில் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்! இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டிருக்கும், ‘கலைஞர் 100’ புத்தகத்தைப் படித்து, எதிரிகளின் அவதூறுகளுக்கு உங்கள் பாணியில் பதிலடி கொடுங்கள். எதிரிகள் நம்மை இழிவு செய்தாலும் கண்ணியமாகப் பதிலடி கொடுப்போம். நாற்பதும் நமதே. நாடும் நமதே!
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.







