மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ்……!

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சி எம்பிக்கள் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன. 28 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு விவகாரங்கள் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக  நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸை மக்களவை செயலகத்தில் எதிர்க்கட்சிகள் வழங்கினர். இதில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 119 எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச அனுமதிக்கப்படவில்லை, 8 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது, எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்கள் மீதான அவதூறு ஆகியவற்றுக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக பிப். 4 ஆம் தேதி அன்று குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் பிரதமர் மோடி நன்றி தெரிவித்து உரையாற்றுவார் என்று கூறப்பட்டிருந்த நிலையில் பிரதமர் மோடி அன்று அவைக்கு வரவில்லை. ‘பிரதமர் மோடியை நான்தான் வர வேண்டாம் என்று கூறினேன், அவருக்கு எதிராக எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்கள் சதி செய்யத் திட்டமிட்டிருந்தனர்’ என்று அவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார். பெண் எம்.பி.க்கள் குறித்து கருத்து தெரிவித்ததால் ஓம் பிர்லாவுக்கு எதிர்க்கட்சி தரப்பில் கண்டனங்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.