27 C
Chennai
December 6, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

”அடிப்படை பிரச்னையை மறக்கடித்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதில் பா.ஜ.க.வினர் வல்லவர்கள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மத்திய பா.ஜ.க. அரசின் ஊழல் முறைகேடுகள், ஜனநாயக விரோத செயல்பாடுகள், மாநில உரிமை பறிப்பு நடவடிக்கைகள், வெறுப்பரசியலின் தீமைகளைப் பற்றித் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு இந்தியா கூட்டணிக்குப் பலம் சேர்ப்பீர் என முதலமைச்ச்

 

இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது..

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஒரு முக்கியமான கருத்தை நேற்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ‘பா.ஜ.க.வின் ஊழல்களைப் பற்றித்தான் நாம் அதிகம் பேச வேண்டும். அதைப் பேசிவிடக் கூடாது என்பதற்காகத்தான் சனாதனத்தைப் பற்றி அந்தக் கட்சி பேசித் திசைதிருப்பிக் கொண்டு இருக்கிறது” என்று  ஆசிரியர்  குறிப்பிட்டுள்ள கருத்து மிக மிகச் சரியானது. அதனையே திராவிட முன்னேற்றக் கழக முன்னணியினரும் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

எந்த ஒரு பிரச்சினையையும் உள்நோக்கத்தோடு திரித்து, ஊடகங்களின் துணையோடு பூதாகரமாக ஆக்கி, நாட்டின் அசலான பிரச்சினைகளை மறக்கடிக்கச் செய்து, மக்கள் கவனத்தைத் திசைதிருப்புவதில் பா.ஜ.க.வினர் வல்லவர்கள் என்பதை நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள்.

நாட்டில் நடைபெறும் – பற்றி எரியும் எந்தப் பிரச்சினைக்கும் வாய்திறக்காத பிரதமர்  நரேந்திர மோடி  மத்திய அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி ‘சனாதனம் குறித்து தக்க பதில் சொல்லுங்கள்’ என்று மத்திய அமைச்சர்கள் அனைவருக்கும் உத்தரவு போடுகிறார் என்றால், அதன் மூலமாக குளிர்காய நினைக்கிறார் என்றே பொருள். சனாதனம் பற்றி மத்திய அமைச்சர்களில் யாராவது ஒருவர் தினந்தோறும் எதையாவது வம்படியாகப் பேசி, அதையே விவாதப் பொருளாக ஆக்கி மக்கள் கவனத்தைத் திசைதிருப்பப் பார்க்கிறார்கள்; பா.ஜ.க. ஆட்சியின் தோல்விகளை மறைக்கும் தந்திரத்துக்கு நம்மவர்கள் இடமளித்துவிடக் கூடாது.

2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி தேர்தலுக்கு முன்னால் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. இந்திய நாட்டின் ஏழை – எளிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவில்லை; வேலைவாய்ப்புகளை உருவாக்கி இளைஞர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றவில்லை; ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்து, சர்வாதிகார ஒற்றை ஆட்சி என்ற ஆபத்தான பாதைக்கு நாட்டை அழைத்துச் செல்கிறார்கள். நாளும் வெறுப்பரசியலை ஊக்குவித்து, இந்தியத் திருநாட்டின் அமைதிக்கு ஊறு விளைவிக்கிறார்கள். மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட பா.ஜ.க. அரசு, அதை மறைக்க விளம்பர ஜாலத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. அதைத்தான் நாம் அனைவரும் முனைப்பாக பரப்புரை செய்தாக வேண்டும்.

வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்ட கருப்புப் பணத்தை முழுமையாக மீட்பேன் என்றார். மீட்டாரா? இல்லை! மீட்கப்பட்ட கருப்புப் பணத்தை இந்திய மக்கள் அனைவருக்கும் 15 லட்சம் ரூபாயாகத் தருவேன் என்றார். தந்தாரா? இல்லை!

ஆனால், ‘தேர்தலுக்காகச் சும்மா சொன்னோம்’ என்று உள்துறை அமைச்சரே ஒப்புக் கொண்டார். தற்போது வெளிநாடுகளில் பதுக்கப்படும் இந்தியர்களின் பணம் பன்மடங்கு அதிகரித்துவிட்டது.

உழவர்களின் வருமானத்தை இரண்டு மடங்கு ஆக்குவோம் என்றார்கள். இரண்டு மடங்கு ஆனதா? இல்லை! இருந்த வருமானத்தையும் பறிக்க மூன்று வேளாண் சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். அதனை எதிர்த்து ஒன்றரை ஆண்டுகாலம் டெல்லிக்கு வந்து உழவர்கள் போராடினார்கள்.

ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவேன் என்று வாக்குறுதி அளித்தார் பிரதமர். ஆனால் எந்த வேலைவாய்ப்பும் ஏற்படுத்தித் தரவில்லை. இளைஞர்களுக்கான எந்த முன்னெடுப்பும் இல்லை. அதிகப்படியான இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழந்ததும் இவரது ஆட்சிக்காலத்தில்தான்.

2022-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் அனைத்துக் குடும்பத்துக்கும் சொந்த வீடு கட்டித் தருவேன் என்று சொன்னார். சொந்த வீடு இல்லாதவர் இல்லையா? இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஆனால் பா.ஜ.க. என்ற கட்சியின் கஜானா மட்டும் அதிகமாக நிரம்பியது. ஊழல்களும், முறைகேடுகளும் மட்டுமே நடந்தன. ரஃபேல் ஊழலும், அதானி முறைகேடுகளும் உலக சமுதாயத்தின் முன்னால் இந்தியாவைத் தலைகவிழ வைத்துவிட்டன.

* பாரத்மாலா திட்டம்

* துவாரகா விரைவுப் பாதைக் கட்டுமானத் திட்டம்

* சுங்கச் சாவடி கட்டணங்கள்

* ஆயுஷ்மான் பாரத் திட்டம்

* அயோத்தியா மேம்பாட்டுத் திட்டம்

* கிராமப்புர அமைச்சகத்தின் ஓய்வூதியத் திட்டம்

* எச்.ஏ.எல். விமான வடிவமைப்புத் திட்டம் ஆகிய ஏழு திட்டங்கள் குறித்து சி.ஏ.ஜி. அறிக்கை வெளியாகி இருக்கிறது.

இந்த ஏழு திட்டங்களிலும் முறைகேடு நடந்துள்ளன, விதிமீறல்கள் நடந்துள்ளன, நிதியைக் கையாள்வதில் மோசடிகள் அரங்கேறியுள்ளன என்பதை இந்த அறிக்கை அம்பலப்படுத்தி இருக்கிறது. இதன் மொத்த மதிப்பு 7.50 லட்சம் கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. இந்த இமாலய ஊழல் முகத்தை மறைப்பதற்காக சனாதனப் போர்வையைப் போர்த்திப் பதுங்கிக் கொள்ளப் பார்க்கிறது பா.ஜ.க.

நான்கு மாதகாலமாக மணிப்பூர் பற்றி எரிகிறது. அதனை அணைக்க முதுகெலும்பு இல்லாத அரசாக மத்திய பாஜக அரசு இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு கூட துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதனை எல்லாம் பேசவிடாமல் திசைதிருப்ப பா.ஜ.க. முயற்சிக்கிறது.

மாநிலங்களின் அதிகாரத்தை பறித்து மாநில மக்களின் உணர்வுகளை அவமதிக்கிற மக்கள் விரோத ஆட்சி ஒன்றியத்தில் நடந்து வருகிறது. எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவது, ஆட்சிகளைக் கவிழ்ப்பது, ஒற்றை ஆட்சி என சர்வாதிகாரப் பாதைக்கு நாட்டை அழைத்துச் செல்வது என்பது உள்ளிட்ட ஆபத்தான முயற்சிகளைப் பட்டியலிட்டு மக்களிடம் சொல்ல வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.

இந்தியா கூட்டணி உருவான பிறகு பா.ஜ.க.வுக்கு நடுக்கம் வந்துவிட்டது. பா.ஜ.க. ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன; அவர்களுக்கு முடிவுரை எழுதி இந்தியா கூட்டணியை அரியணையில் அமர்த்த மக்கள் தயாராகி விட்டார்கள் என்பதை உணர்ந்த பா.ஜ.க. ஆட்சியாளர்கள், இப்போது நாட்டின் பெயரையே மாற்றத் துணிந்து விட்டார்கள்.

நடந்து முடிந்த இடைத்தேர்தல்களில் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளார்கள். இந்தியா முழுமைக்குமான வெற்றிக்கான அடையாளமாக இது அமைந்துள்ளது.

பா.ஜ.க.வின் ஊழல் – மதவாத – எதேச்சாதிகார முகத்தை அம்பலப்படுத்தி, நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சியைத் தோற்கடிப்பதன் மூலம், நாட்டையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பது என்ற உன்னதமான இலக்கில் வெல்ல அர்ப்பணிப்போடு செயல்படுவோம் – எந்த கவனச் சிதறலுக்கும் இடமளித்துவிடக் கூடாது என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy